
கடந்த 1986 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில், விக்டோரியாவில் உள்ள கோலாக் என்ற பகுதியில் பிறந்தவர் ஆரோன் பின்ச். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இவரும் ஒருவர். கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 63 பந்துகளில் 14 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் உள்பட 156 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். டி20 போட்டியில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.
இந்த சாதனையை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் முறியடித்தார். ஆம், அந்தப் போட்டியில் அவர் 172 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக 103 டி20 போட்டிகள் விளையாடியுள்ள பின்ச் 2 சதம் (156 மற்றும் 172) மற்றும் 19 அரைசதம் உள்பட 3120 ரன்கள் குவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 146 ஒரு நாள் போட்டிகள் விளையாடியுள்ள பின்ச் 17 சதங்கள் மற்றும் 30 அரைசதங்கள் உள்பட 5406 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 103 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆரோன் பின்ச் 76 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆரோன் பின்ச் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்றுள்ளார்.
இதுவரையில் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள ஆரோன் பின்ச், 278 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு கேப்டனாக 76 டி20 போட்டிகளில் விளையாடிய ஆரோன் பின்ச் 40 போட்டிகளில் வெற்றியும், 32 போட்டிகளிலும் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
இதே போன்று 55 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த பின்ச், 31 போட்டிகளில் வெற்றியும், 24 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பையையும், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையையும் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஆரோன் ஃபின்ச் கூறியிருப்பதாவது: 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி20 உலக் கோப்பை தொடரில் நான் இருப்பேனா இல்லையா என்பது எனக்கு சந்தேகம் தான். நான் இப்போது ஓய்வு பெறுவது என்பது சரியானது தான். என் நாட்டிற்காக 12 வருடமான கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இந்த 12 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு துணையாக இருந்த ரசிகர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என்று அனைவருக்கும் எனது நன்றி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ள ஆரோன் பின்ச் உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.