இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய மிட்செல் ஜான்சன், ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஆரம்ப போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆட வாய்ப்பு பெற்று, முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடித்தால், இந்திய அணி மீது அழுத்தம் போடலாம். ஆஸ்திரேலிய அணி 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு சென்றுள்ளது. இந்திய அணி கண்டிப்பாக நேதன் லயனின் அனுபவம் மற்றும் அவரது டெஸ்ட் ரெக்கார்டை கண்டிப்பாக மதிப்பார்கள். இந்திய வீரர்கள் கால் நகர்த்தலில் கெட்டிக்காரர்கள். அதனால் ஸ்பின்னை திறம்பட எதிர்கொண்டு ஆடுவார்கள் என்று மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.