இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய ஆகாஷ் தீப் 10 விக்கெட் எடுத்த தனது சிறந்த செயல்பாட்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரிக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''எனது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நான் இந்திய அணியின் வெற்றியையும், 10 விக்கெட்டுகளையும் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் இப்போது புற்றுநோயில் இருந்து குணமடைந்து வருகிறாள். நான் அவருக்காக விளையாடினேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தந்தை, சகோதரர் ஒரே ஆண்டில் உயிரிழப்பு
ஆகாஷ் தீப் பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவருடைய தந்தையும், சகோதரரும் ஒரே ஆண்டில் உயிரிழந்தனர்.
இதனால் பெரும் சோகத்தில் ஆழந்த ஆகாஷ் தீப் தந்தையின் கனவை நிறைவேற்றும்விதமாக கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு கூறியிருந்தார். தற்போது அவருடைய சகோதரிக்கும் புற்றுநோய் இருக்கும் நிலையில், மனதில் வலியுடன் விளையாடி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பேச வைத்துள்ளார்.