ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தவெக தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டணிக்கான அச்சாரமாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர், ஜனசேனா கட்சியின் தலைவர், நடிகர் என பன்முகம் கொண்ட பவன் கல்யாண், நடிகரும், தவெக தலைவருமான விஜய்யுடன் தொலைபேசியில் பேசினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலில் பல முக்கியமான அரசியல் ஆலோசனைகள் பரிமாறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் அப்துல் முத்தலிப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “பவன் கல்யாண், தனது அண்ணன் சிரஞ்சீவி ஆரம்பித்த பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தோல்வி அனுபவத்தை விஜய்யிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. “என் அண்ணன் பிரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தொடங்கியபோது மக்களின் பேராதரவு இருந்தது. சிலர் தவறான ஆலோசனையால் கட்சி சரிந்தது. இன்று அதிலிருந்து நான் பலம் கற்றுக்கொண்டேன்,” என்று பவன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
24
திமுகவை தனியாக வீழ்த்த முடியாது
அவர் தொடர்ந்து, “நான் ஆரம்பத்தில் எதிர்கொண்ட சவால்கள் கடினமானவை. ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்துவது எனது முதல் இலக்கு. அதற்காக சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்தேன். அது சரியான முடிவு. இன்று அந்த முடிவே என்னை துணை முதல்வர் பதவிக்கு கொண்டு வந்தது. என் கட்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சரியான முடிவு தான் அரசியலில் நீண்டகால வெற்றிக்கு அடித்தளம்.
பவன் கல்யாண் விஜய்யிடம், “திமுகவை தனித்து நின்று வீழ்த்த முடியாது. ஆனால் சரியான நேரத்தில், சரியான கூட்டணியில் நின்றால், தமிழகத்தில் திமுக. ஆட்சியை மாற்றி விடலாம். நீண்டகால அரசியலை நினைத்தால் நிதானமாக முடிவெடுங்கள். உங்களுக்கும் வயது இருக்கிறது. இப்போதே அடித்தளத்தை வலுப்படுத்துங்கள்,” என்று ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
34
பின்னணியில் கே.எஸ். ராதாகிருஷ்ணன்
இந்த உரையாடலின் பின்னணியில் இருப்பவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எனவும், அவர் பவன் கல்யாணுக்கு ஆந்திராவில் இருந்து பல்வேறு அரசியல் ஆலோசனைகளில் துணைபுரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நன்றிக்கடனாக பவன் கல்யாண், ராதாகிருஷ்ணனை அமித்ஷாவிடம் அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின் பவன் கல்யாண், ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவில் சேர்வதற்கான ஆலோசனையையும் வழங்கியதாகத் தெரிகிறது. இதன்மூலம் பவன் தமிழக அரசியலில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்தி வருகிறார். திமுகவால் புறக்கணிக்கப்பட்ட ராதாகிருஷ்ணனின் ஆளுமையை பவன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பது அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
பவன் கல்யாணின் திட்டம் தெளிவாக உள்ளது. அவர் தற்போது தெலுங்கானாவில் தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில், தமிழகத்திலும் தன் அடித்தளத்தை அமைக்க முயற்சிக்கிறார். இது, தென்னிந்திய அரசியலில் ஒரு புதிய இணைப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, பாஜக தற்போது பவன் கல்யாணின் திரைத்துறை செல்வாக்கை பயன்படுத்தி, தவெகவை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. ஒருவேளை விஜய் அந்த கூட்டணியில் இணைந்தால், பவன் கல்யாண் தான் அதன் முக்கிய பாலமாக செயல்படுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், பவன் கல்யாணின் ஒவ்வொரு நகர்வும் தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.