
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வித்தியாசமான முடிவுகளை கொடுத்துள்ளது. போட்டியிட்ட யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே சமயம் புதிதாக கட்சி தொடங்கி, முதல் தேர்தலிலேயே 107 எம்எல்ஏக்களைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் தவெகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிமுகவிற்கு புதிய தலைவலி தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என பலரும் ஓரம் கட்டப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். ஆனால் எடப்பாடி கட்சியை வழிநடத்தத் தொடங்கியது முதல் இதுவரை நடந்த ஒரு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இது அதிமுகவின் தொண்டர்களிடையே பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 2026 ஆம் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவை மீட்க கட்சியின் முன்னணித் தலைவர்கள் முயன்று வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை மாற்றுமாறும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தனித்தனியே கூடி ஆலோசனை நடத்தினர். அதன்படி கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், சட்டமன்ற குழுத் தலைவராக வேலுமணியும் இருப்பார்கள் என்று சபாநாயகர் இடம் கடிதம் கொடுக்கப்பட்டது. மேலும் வேலுமணி தலைமையில் 24 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், இவர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று சி.வி சண்முகத்தை முதலமைச்சர் விஜய் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவின் எம்எல்ஏக்கள் தவெகவுடன் கூட்டணி அமைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
தவெகவுடன் கூட்டணி அமைக்கவோ அல்லது இணைய திட்டமிட்டாலோ அதிமுக எம்எல்ஏக்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 91 வது திருத்தத்தின்படி ஒரு கட்சியில் இருந்து பிரிந்து செல்லவோ அல்லது மற்றொரு கட்சியுடன் இணையவோ குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும். இந்த விதியை மீறுபவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் எம்எல்ஏக்கள் பலம் 47 ஆக உள்ளது. அதிமுகவிலிருந்து தனி அணியாக செயல்படுவோ அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்படுவோ வேண்டுமென்றால் 32 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
32 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாவிட்டால் அந்த அணியினர் மீது பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க முடியும். 24 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் கடிதம் அளிக்க முடியும். கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ந்தால் 24 எம்எல்ஏக்களின் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும் அதிமுக தரப்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 47 எம்எல்ஏக்களில் 32 பேரின் ஆதரவை திரட்டுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் எளிதான காரியம் அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி வசம் இருப்பதால் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே சி.வி சண்முகம் தரப்பிற்கு இருக்கிறது. அதிலும் தற்போது 6 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்து 24 எம்எல்ஏக்கள் மட்டுமே தவெகவை ஆதரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
32 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத பட்சத்தில் வேலுமணி, சி.வி சண்முகம் தரப்பு எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் நிலையான ஆட்சியை அமைப்பதற்கு மாற்று வழிகளை தேடி வருகிறது. திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்று 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும் விஜய், ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த விரும்புவதாக யூகங்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இந்த சட்ட சிக்கல் காரணமாக என்ன நடக்கப் போகிறது? அடுத்த கட்ட நகர்வுகள் என்ன? ஈபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.