குழந்தைகளுக்கு நாட்டுக்கோழி முட்டை அல்லது வெள்ளை முட்டை ஆகிய இரண்டில் எதை கொடுப்பது நல்லது என பல பெற்றோருக்கும் குழப்பம் இருக்கும். இந்தப் பதிவில் அதற்கான விளக்கத்தைக் காணலாம்.
மக்கள் இப்போது இயற்கையை நோக்கி திரும்பி கொண்டிருக்கின்றனர். இயற்கை முறையில் தயார் செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்படும் ஆர்கானிக் பொருள்கள் மீது மக்களின் கவனம் திரும்புகிறது. அதில் முட்டையும் விதிவிலக்கல்ல. அதாவது நாட்டுக்கோழி முட்டைதான் சத்துக்கள் கொண்டவை. பிராய்லர் கோழியின் வெள்ளை முட்டைகளை தவிர்க்க வேண்டும் எனவும் சிலர் சொல்லிவரும் நிலையில், இரண்டில் எது சிறந்தது என இங்கு காண்போம்.
உண்மையில் இரண்டு முட்டைகளுமே அதற்கே உரித்தான சத்துக்களை கொண்டுள்ளன. இரண்டிலுமே தசைகளின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான புரதம், உயிரியல் செயற்பாடுகளுக்கு தேவையான வைட்டமின்கள் , தாதுக்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
25
என்ன வித்தியாசம்?
இரண்டு கோழிகளையும் பொறுத்தவரை, அவற்றின் உணவு, வளர்கிற சூழல் காரணமாக சின்ன தாக்கம் இருக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி ஆகியவற்றில் அது வெளிப்படும். ஆனால் இரண்டுமே சத்துக்கள் மிகுந்தவைதான். ஒப்பிட்டளவில் சிறிய மாற்றமே இருக்கலாம்.
35
நாட்டுக்கோழி vs பிராய்லர் கோழி முட்டை
நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி ஆகிய இரண்டு கோழி முட்டைகளும் குழந்தைகளுக்கு கொடுக்க தகுதியானவைதான். இரண்டுமே ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. நாட்டு கோழி முட்டைகளில் புரதம், ஒமேகா- 3 கொழுப்பு அமிலம் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் சற்று அதிகம் காணப்படும். விலையும் வெள்ளை முட்டையை விட கொஞ்சம் கூடுதல். இதுதான் இரண்டு முட்டைகளுக்கும் உள்ள வித்தியாசம். மற்றபடி உங்களுக்கு அருகே நாட்டுக்கோழி முட்டைகள் கிடைத்தால் கொடுக்கலாம். நாட்டுக்கோழி முட்டைகள் என்றில்லை, காடை முட்டை, பிராய்லர் கோழி முட்டை என அனைத்து ரக முட்டைகளும் குழந்தைகளுக்கு நல்லது.
முட்டையில் காணப்படும் கோலின் சத்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. இதில் வைட்டமின் ஏ, டி, ஈ, பி12, இரும்புச்சத்து, அயோடின், புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை உள்ளன. இதில் 6 கிராம் வரை புரதச்சத்து இருப்பதால் காலையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
55
எப்போது கொடுக்கலாம்?
குழந்தைகளின் 8 மாதங்களுக்கு பின் வேக வைத்த முட்டையை கொடுக்கத் தொடங்கலாம். குழந்தைகளின் ஒரு வயது வரை முட்டையை தினமும் கொடுக்காமல் வாரம் 2 முறை கொடுத்தால் போதுமானது. அதிக உப்பு சேர்க்க வேண்டாம். அவித்த முட்டையை பழக்கலாம். சில குழந்தைகளுக்கு முட்டை சாப்பிடுவது அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இது மாதிரியான சந்தர்ப்பங்களில் மருத்துவரிடம் ஆலோசித்து செயல்படுவது அவசியம்.