தமிழ்நாட்டில் இட்லி, தோசை ஆகிய உணவுகளை சமைக்காத வீடுகள் மிகவும் குறைவு. இட்லி மாவு உண்மையில் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக் கூடிய அருமையான உணவு. புளிக்கவைக்கப்பட்ட மாவில் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஆதரிக்கும் பண்புகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் மாவு அரைக்க அரிசி ஊறவைக்க மறந்து விட்டு, தாமதமாகவே மாவு அரைப்பார்கள். அது புளிக்க கூடுதல் நேரம் எடுக்கும். இதுமாதிரியான அவசர காலங்களில் மட்டும் இங்கு கொடுத்துள்ள டிப்ஸ் உபயோகிக்கலாம். இந்தப் பதிவில் அரிசி மாவை எப்படி புளிக்கச் செய்யலாம் என காண்போம்.
25
பிரஷர் குக்கர் முறை
நல்ல மூடியுள்ள பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான மாவை ஊற்றி உப்பு போடுங்கள். இதை நன்கு கலக்கிவிட்டு கொள்ளுங்கள். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். இந்தக் குக்கருக்குள் கலக்கிய மாவையும் வைத்து மூடி வைத்து மூட வேண்டும். குக்கரை மூடி விசிலை சொருகுங்கள். வெறும் 5 நிமிடங்கள் அடுப்பை குறைந்த தீயில் எரியவிடுங்கள். பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும். இதை ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு குக்கர் மூடியை திறந்தால் மாவு நன்கு புளித்து இட்லி அல்லது தோசை செய்யும் பதத்திற்கு வந்துவிடும்.
35
பாத்திரங்கள் தேர்வு
மாவை சேமிக்க பிளாஸ்டிக் வாளி, டப்பாக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மண் பாத்திரங்கள், எவர்சில்வர் பாத்திரங்களை உபயோகிக்கலாம். இவை மாவை சரியாக புளிக்கவைக்கும். சில்வர் பாத்திரங்களில் மாவை அரைத்து வைப்பது நல்லது.
இட்லி மாவில் கல் உப்பு போட்டு கைகளால் மாவை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். இதனுடன் அரை ஸ்பூன் அளவுக்கு தயிர், சர்க்கரை (கால் ஸ்பூன்), அதே போல கால் ஸ்பூன் மட்டும் எலுமிச்சை சாறு விட்டு மூடி வைத்தால் சீக்கிரம் புளித்து விடும். இந்த பாத்திரைத்தை காற்று போகாதபடி மூடி, சமைக்கும் அடுப்புக்கு அருகே வைத்தால் அந்த வெப்பத்தில் 1 மணி நேரத்தில் புளிக்கும்.
55
Kitchen Tips
இந்த முறையை அடிக்கடி செய்யாமல் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாவை இயற்கை வழியில் புளிக்க வைப்பது நல்லது. இதற்கு மாவு அரைத்த பின்னர் 4 முதல் 7 மணி நேரம் தேவைப்படும். எப்போதும் சீக்கிரமே மாவை அரைத்து அதனை இயற்கையான முறையில் புளிக்கச் செய்து உண்பதே குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.