
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பலரது இலக்காகவும், ஆரோக்கியத்திற்கான வழியாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில சமயங்களில் திடீர் எடையிழப்பு என்பது சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். அனைத்து எடையிழப்புகளையும் ஆரோக்கியமானதாக கருத முடியாது. எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் ஆறு முதல் 12 மாதங்களுக்குள் உடல் எடையில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டால் அது மருத்துவ ரீதியாக ‘திட்டமிடப்படாத எடையிழப்பு’ என்று வரையறுக்கப்படுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிரமப்பட்டாலோ, நோயை எதிர்த்து போராடினாலோ அல்லது ஹார்மோன் சீர்குலைவை அனுபவித்தாலோ இது போன்ற எடையிழப்புகள் ஏற்படலாம்.
தைராய்டு சுரப்பி அதிகமாக சுரக்கும் பொழுது உடல் வளர்ச்சிதை மாற்றம் வேகமாக நடக்கும். இதன் காரணமாக உடல் எடையானது விரைவாக குறைய தொடங்கும். ஹைப்பர் தைராய்டிசம் இருப்பவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகரிப்பது, வியர்வை அதிகமாக வெளியேறுவது, தூக்கமின்மை, பதற்றம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். எடை குறைவு கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று. உடல் செல்களுக்குள் குளுக்கோஸ் நுழைய முடியாததால், உடல் ஆற்றலுக்காக தசைகளையும் கொழுப்பையும் பயன்படுத்தத் துவங்கும். இதன் காரணமாக எடையிழப்பு அதிகமாகிறது எடையிழப்புடன் சேர்த்து அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், தீவிர சோர்வு, மங்கலான பார்வை, தசையிழப்பு ஆகியவையும் நீரிழிவுக்கான மற்ற அறிகுறிகள் ஆகும்.
புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளில் உடல் எடையிழப்பும் முக்கிய அறிகுறியாகும். புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் அது உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறது. இது உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது. கணையம், வயிறு, உணவுக் குழாய், கல்லீரல் அல்லது நுரையீரல் புற்று நோய்களின் முதல் அறிகுறிகளில் ஒன்றாக விவரிக்கப்படாத எடையிழப்பு இருக்கிறது. சில வகையான இதய நோய்கள் குறிப்பாக இதய செயலிழப்பு இருக்கும் பொழுது உடல் திரவங்களை சரியாக வெளியேற்ற முடியாமல் போகிறது. இதன் காரணமாக பசியின்மையும் அதிக எடையிழப்பும் ஏற்படலாம்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற நுரையீரல் நோய்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இது அதிக ஆற்றலை செலவழிப்பதால் படிப்படியாக உடல் எடை குறையத் துவங்கும். குரோன் நோய் அல்லது அல்சரைடிவ் கோலைடீஸ் போன்ற குடல் நோய்கள் செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதன் காரணமாக உடல் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாக உறிஞ்ச முடியாமல் போகிறது. இதுவும் உடல் எடையிழப்புக்கு காரணமாக அமைகிறது. சிலருக்கு தீவிரமான மன அழுத்தம், மனச்சோர்வு ஏற்படும் பொழுது பசியின்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக உணவு உட்கொள்ளும் அளவு குறைந்து உடல் எடை குறையத் தொடங்கலாம். எச்ஐவி வைரஸ் தாக்கம் ஏற்படுபவர்களுக்கும் உடல் வலுவிழந்து திடீரென எடை குறையத் தொடங்கும். எய்ட்ஸ் நோய்க்கான பொதுவான அறிகுறியாக எடையிழப்பு உள்ளது.
நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கிறீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. சரியான உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடல் எடையை குறைப்பது சரியான வழிகள் ஆகும். ஆனால் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் உங்கள் எடை குறைந்தால் குறிப்பாக சோர்வு, செரிமானப் பிரச்சனைகள், மனநிலை மாற்றங்களுடன் எடை குறைப்பும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். திட்டமிடப்படாத எடையிழப்பு சாதாரணமானதல்ல. இது மேற்குறிப்பிட்டப்பட்டுள்ள ஆபத்தான நோய்களின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்பதை உணருங்கள். எனவே மருத்துவ உதவியை ஆரம்பத்திலேயே நாடுவது என்பது அடிப்படை காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதற்கு உதவி புரியும்.