
குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பது எல்லா பெற்றோரின் ஆசையாக இருக்கும். ஆனால் சில குழந்தைகள் எவ்வளவு சிரமப்பட்டு படித்தாலும் உடனே மறந்துவிடுவார்கள். இதனால் தேர்வில் மதிப்பெண்கள் குறையும். சோர்வும், தாழ்வு மனப்பான்மையும் கூட ஏற்படும்.
இப்படி குழந்தைகள் மறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் உண்டு. தங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. வெறுமனே குழந்தைகளை திட்டினால் படித்துவிடுவார்களா? அதற்கு சில விஷயங்களை செய்ய வேண்டும். இந்தப் பதிவில் அதைக் காணலாம்.
குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க தூக்கம் அவசியம். தூக்கம் மூளையை ஓய்ந்திருக்க செய்வது மட்டுமின்றி, முந்தைய நாள் கற்றுக் கொண்டதை இன்று நினைவுக்கு கொண்டு வரும் வகையில் ஒருங்கிணைக்கும். 3 முதல் ஐந்து வயது உடைய குழந்தைகள் பகல் நேரமும் தூங்க வேண்டும். வளர்ந்த குழந்தைகள் தூங்கச் செல்லும் முன் டிவி, செல்போன் போன்ற எதையும் பார்க்கக் கூடாது. குழந்தைகளை பொருத்தவரை 9 முதல் 12 மணி நேரம் தூக்கம் அவசியம். இது வயதுக்கேற்றவாறு மாறுபடலாம். குழந்தைகள் வகுப்பறையில் தூங்குவது அவர்களின் கற்றலை ஆதரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தைகளுக்கு ஏரோபிக் செயல்பாடு அவசியம். இது அவர்களின் கற்றலை மேம்படுத்தும். நாள்தோறும் 60 நிமிடங்கள் மிதமானது முதல் தீவிரமானது வரை ஏதேனும் உடற்செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அது ஏதேனும் விளையாட்டுகள், சைக்கிள் ஓட்டுதல் போன்றவையாக இருக்கலாம். உருவாக்குங்கள். தினமும் வீட்டுப்பாடம் செய்யும் முன் 10 முதல் 15 நிமிடங்கள் தோப்புக்கரணம், ஜம்பிங் ஜக்ஸ் போன்ற சிறுபயிற்சிகளை செய்யலாம்.
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க சில விஷயங்களை செய்யலாம். அதில் வினாடி வினாவுக்கு முக்கிய பயனுண்டு. அவர்களுடைய நினைவில் இருந்து தகவல்களை சொல்வதற்கு வினாடி- வினா போல கேள்வி பதில்களை கேட்கலாம். இது அவர்களின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மீண்டும் மீண்டும் படிப்பதை விடவும் படித்ததை நினைவூட்ட, கற்றலை மேம்படுத்த இது போன்று கேள்வி கேட்கலாம். ஃபிளாஷ் கார்டுகள், படித்தவற்றில் இருந்து 2 முதல் 3 கேள்விகளை கேட்கலாம். மறுநாள் அதே டாபிக்கில் 2 நிமிடங்களுக்கு “பாப் வினாடி வினா” செய்யலாம்.
பெரிய தலைப்புகளில் உள்ள கடினமான பாடங்களை ஒரே நாளில் படிக்க வைக்க வேண்டாம். குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சிறு சிறு அமர்வுகளாக படிக்க வைக்கலாம். இதனால் அவர்களுக்கு படிப்பது கடினமாக தெரியாது. படித்த அனைத்து விஷயங்களும் நினைவில் இருக்கும்.
குழந்தைகள் படிக்கும் சொற்களை ஓவியங்களாக மாற்ற செய்வது காட்சிகளாக நினைவில் இருக்கும். டூடுல் போன்ற ஓவியங்கள் மூலம் பாடங்களை சத்தமாக சொல்லிக் கொடுங்கள். எழுதப்பட்ட வார்த்தைகளை விட படங்களாக வரையப்பட்ட வார்த்தைகள் சிறப்பாக நினைவில் இருக்குமாம்.
காலை உணவு மூளை உணவாகும். குளுக்கோஸ், போதுமான திரவங்கள் தான் மூளையின் கவனத்தையும் வேலை செய்கிற நினைவாற்றலையும் மேம்படுத்தும். அதிலும் லேசான நீரிழப்பு கூட செயல்திறனை மந்தமாக்கக் கூடும். அதனால் புரதச்சத்து, நார்ச்சத்து அடங்கிய உணவுகளை காலையில் கொடுங்கள். முட்டை, முழுதானியங்கள் தோசை, பழங்கள் போன்றவை அவசியம். தண்ணீர் பாட்டில் கொடுத்து பள்ளிக்கு அனுப்புங்கள். காலை போதுமான தண்ணீரும், உணவும் எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவார்கள்.
நினைவாற்றல் மேம்பட தியானம் உதவுகிறது. மூளையின் மந்தநிலையை அகற்ற 2 நிமிடங்கள் சுவாசப் பயிற்சி செய்யலாம். படிக்கும் முன்பு 2 நிமிடங்கள் "சதுர சுவாசத்தை" செய்யவேண்டும். மூச்சை 4 வினாடிகள் உள்ளிழுத்துவிட்டு, 4 வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் 4 எண்ணியபடியே மூச்சை மெதுவாக வெளியேவிட வேண்டும். இப்படி செய்வது படிக்கும்போது மூளையை புத்துணர்வாக வைக்கும்.
இந்த விஷயங்களை பின்பற்றினால் குழந்தைகள் படித்ததை நிச்சயம் மறக்கமாட்டார்கள். அவர்கள் படிப்பு சுட்டியாக மாறிவிடுவார்கள்.