
டீ அல்லது காபி உடலுக்கு தற்காலிக உற்சாகம் தருவது. இந்தியாவில் உள்ள பலருக்கு 'டீ' தான் ஆற்றல் அளிக்கிறது. உணவுக்கு பதிலாக டீயை மட்டும் குடிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை காலையில் காபி அல்லது டீ அருந்திவிட்டு தான் பலர் வேலையை தொடங்குகின்றனர். குளிர் நேரங்களில் இதமாக உணர சூடான தேநீர் அருந்துவது தான் மக்களுக்கு முதலில் நினைவில் வரும்.
ஆனால் அடிக்கடி டீயோ, காபியோ அருந்துவது உடலுக்கு நல்லதல்ல. ஒருவர் அதிகமான அளவில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அது உடல் நலத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வரும். அதிகமான அளவில் காஃபின் உடலுக்குள் செல்வது தான் இந்தப் பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளி. இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க நினைத்தால், இந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும்.
1 டம்ளர் தண்ணீர்:
ஒவ்வொரு முறை நீங்கள் டீ அல்லது காபி அருந்தும் முன்பாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளுங்கள். டீ குடிப்பதற்கு 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். இப்படி செய்வதால் தேநீர் மற்றும் காபி குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். காலையில் நீங்கள் தேநீர்/ காபி குடிக்கும் முன்னர் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் பிரச்சனைகள் வருவது குறையும்.
இதையும் படிங்க: நெய் காபி vs நெய் டீ - எதை காலையில் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்!!
ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
காபி அல்லது டீ குடிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும். உடலில் உள்ள அசிடிட்டி குறைவதற்கு தண்ணீர் குடிப்பது உதவுகிறது. வெறும் வயிற்றில் நீங்கள் காபி அல்லது தேநீரை அருந்தும்போது அது அசிடிட்டி பிரச்சனை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் போது அது வாயு, அசிட்டி பிரச்சினைகளை மோசமாக்கும். ஆனால் நீங்கள் தண்ணீர் அருந்தி விட்டு டீ குடிப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை குறைகிறது.
வயிற்றுப்புண்கள்:
தொடர்ந்து வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பவர்களுக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இரவு முழுக்க வயிற்றில் அமிலச் சுரப்பு இருந்திருக்கும். டீயும் காபியும் அமிலத்தன்மை வாய்ந்த பானங்கள் தான். இந்த சூழலில் அப்படியே டீயோ காபியோ அருந்தினால் அது வயிற்றின் நிலைமையை மோசமாக்கும். அல்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்க டீ, காபி அருந்து முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வெறும் வயித்துல கொத்தமல்லி டீ குடிங்க; எடையை குறைப்பதோடு இன்னும் பல நன்மைகள்!!
பற்கள் ஆரோக்கியம்:
டீ அல்லது காபி குடிக்கும் முன்பு தண்ணீர் அருந்துவது பற்களைப் பாதுகாக்க சிறந்த வழியாகும். டீ, காபியில் காஃபின் இருப்பது போலவே டானின் என்னும் வேதிப்பொருளும் இருக்கிறது. இந்த வேதிப்பொருள் பற்களின் மீது ஒரு அடுக்கை ஏற்படுத்தும். அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை தண்ணீர் அருந்தி சமாளிக்க முடியும்.