
கருப்பட்டி என்பது இயற்கையாகவே கிடைக்கும் அற்புதமான மூலிகை மருந்தாகும். இது பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சு வடிகட்டும் போது கிடைக்கிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனை அட்டு, பானாட்டு என்றும் அழைப்பார்கள் .
இன்றும் கிராமப்புறங்களில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். னால், நகரத்தில் இருக்கும் பலருக்கும் கருப்பட்டியின் மகத்துவம் பற்றி தெரியாத ஒன்றாகவே உள்ளது. இதில் இருக்கும் மூலிகை நன்மைகளை தெரிந்தால் நிச்சயமாக இதனை சாப்பிடாமல் மிஸ் பண்ணவே மாட்டீர்கள்.
கருப்பட்டியின் நன்மைகள்:
கருப்பட்டியில் இருக்கும் இரும்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் வேறு எதிலுமே இல்லாத அளவிற்கு மகத்துவமானது என்று கூறலாம். குறிப்பாக பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். பெண்கள் வயதிற்கு வரும் நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யவும் உதவுகிறது. நீங்கள் தினமும் காலையில் குடிக்கும் டீ, காபியில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக, கருப்பட்டி போட்டுக் குடித்தால் நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
மேலும், இது உடலை சுறுசுறுப்பாக்குவதோடு ரத்தத்தை சுத்திகரித்து, மேனி பளபளக்கவும் வைக்கும். இதனை நீங்கள் டீ, காபி மட்டுமின்றி கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பணியாரம், கருப்பட்டி பால்கோவா, கருப்பட்டி களி என விதவிதமான உணவு வகைகளை செய்து அசத்தலாம். இதனால், கிராமங்களில் இதன் புகழ் ஓங்கி காணப்படுகிறது.
ஒரிஜினல் கருப்பட்டி எது? போலி கருப்பட்டி எது?
1. சுவையை வைத்து கண்டறிவதற்கு, உண்ணும் போது அதன் சுவை நல்ல வாசனையுடன் இனிப்பாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி ஆகும்.
2. ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.
3. முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தல் கருப்பும், பழுப்புக் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.
4. ஒரிஜினல் கருப்பட்டி எவ்வளவு நாள் வீட்டில் இருந்தாலும், கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி , சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்து விடும்.
5. அதேபோன்று, ஒரிஜினல் கருப்பட்டியில் நாட்கள் செல்ல செல்ல கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.
6. கடைகளில் வாங்கி பயன்படுத்தும் போலி கருப்பட்டியில், பளபளப்புடன் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டும். ஆனால், ஒரிஜினல் கருப்பட்டியில் கையில் எடுத்து உற்றுப் பார்த்தால் பளபளப்பு தன்மை இருக்காது.
சமீப காலமாக பனைமரத்தின் அளவு தென் மாவட்டங்களில், குறைய துவங்கியுள்ளதால், பனைமரத்தின் வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்துலயும் கடந்த 10 வருசமா கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகிவிட்டது.