
ஒரு ஆய்வில் தினமும் நடப்பவர்களுடைய ஆயுள் காலம் 10 ஆண்டு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. நடைபயிற்சி நம்முடைய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத வரப்பிரசாதம். இன்றைய காலகட்டத்தில் மக்களின் உடல் நலத்தை பேண நடைபயிற்சி மேற்கொள்ள மருத்துவர்களே அறிவுறுத்துகின்றனர். அனைத்து வயதினரும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சி நடைபயிற்சியாகும். நடைபயிற்சியினால் உங்களுடைய பற்களின் ஆரோக்கியம் மேம்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த பதிவில் நடைபெற்றினால் கிடைக்கும் ஐந்து பயன்களை காணலாம்.
எடையை கட்டுப்படுத்தும்!
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் உடல் பருமனை பற்றிய முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் சுறுசுறுப்பாக நடப்பவர்களுடைய மரபணுவில் உடல் பருமனுக்கான விளைவுகள் பாதியாக குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உங்களுடைய மரபணு உடல் பருமனை அதிகரிக்கும் சாத்தியம் பாதியாக குறையும். இதன் மூலம் உங்களால் உருவாகும் சந்ததியும் ஆரோக்கியமாக மாற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: வாரத்தில் '2' நாட்கள் பின்னோக்கி நடந்தால் கூட போதும்.. இத்தனை நன்மைகளா?
பற்களுக்கும் நடைபயிற்சிக்கும் தொடர்பு:
சொத்தைப் பற்களைக் கட்டுப்படுத்த நடைபயிற்சி உதவும். எக்ஸிடர் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இரு ஆய்வுகளில் இனிப்பு சாப்பிடும் விருப்பத்தை நடைபயிற்சி குறைப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு நாளில் 15 நிமிடங்கள் நடந்தால் கூட உங்களுக்கு சாக்லேட் மீது ஏற்படும் ஆசை கட்டுப்படுத்தும் என தெரியவந்துள்ளது. நீங்கள் அதிகமான மன அழுத்தம் காரணமாக சாக்லேட் சாப்பிட தூண்டப்படுவீர்கள். நடைபயிற்சி செய்யும் போது உங்களுடைய மனநிலை சீராகி சாக்லேட் சாப்பிடும் எண்ணங்கள் குறைவதாகவும், இனிப்பு பண்டங்களை சாப்பிடுவது கட்டுப்படுத்தும் ஆற்றல் நடைபயிற்சிக்கு உள்ளதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நீங்கள் இனிப்புகளை குறைக்கும்போது உங்களுடைய பற்களின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
மார்பகப் புற்றுநோய் தடுப்பு:
உங்களுடைய உடல் இயங்கிக் கொண்டிருப்பது மார்பகப் புற்று நோயிலிருந்து உங்களை காப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது தினசரி உடற்பயிற்சிகள் அல்லது நடைப்பயிற்சி மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரத்தில் குறைந்தது 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்கள் வாக்கிங் செல்லும் பெண்களுக்கு ஒரு நாளில் மூன்று மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக நடைபயிற்சி செய்த பெண்களை விட மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 14 சதவீதம் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமன், ஹார்மோன்கள் சமநிலை உள்ளிட்ட பல காரணங்கள் புற்றுநோய் ஏற்படலாம். ஆனால் நடைபயிற்சி பெண்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றுகிறது.
மூட்டு வலி நிவாரணம்:
நீங்கள் தினமும் வாக்கிங் செல்வதால் மூட்டு வலியில் இருந்து விடுதலை அடைய முடியும். ஒரு வாரத்தில் அதிகபட்சம் ஆறு மைல்கள் வரை நடப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் மூட்டுகள் வலுவாகி வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களுடைய முழங்கால்கள் இடுப்பு எலும்புகளை நடைப்பயிற்சி உயவூட்டுகிறது. அவை சார்ந்த தசைகளை உறுதியாக்குவதால் வலிகள் நீங்குகின்றன.
இதையும் படிங்க: வாக்கிங்ல 'கட்டாயம்' சேர்க்க வேண்டிய '5' விஷயங்கள்.. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!!
நோய் எதிர்ப்பு மண்டலம்:
நடைபயிற்சி உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நோய்தொற்றிலிருந்து காக்கிறது. பருவகாலங்களில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவற்றிலிருந்து நடைபயிற்சி உங்களை பாதுகாக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தவர்கள், வாரத்தில் ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாகவே உடற்பயிற்சிகளை செய்தவர்களைக் காட்டிலும் 43 சதவீதம் குறைவாகவே நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கிறது என்பதற்கு இந்த ஆய்வின் முடிவுகளே சான்றளிக்கிறது. ஒருவேளை அவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டிருந்தாலும், அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டுள்ளார்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கு தினமும் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அதை இன்றிலிருந்து தொடங்குங்கள்.