Black Pepper Adulteration: நாம் வீட்டில் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு ஒரிஜினலா? இல்லை கலப்படமா? என்பதை ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து கண்டுபிடிக்கலாம். அந்த எளிய டிரிக் இதோ.
நமது சமையலறைகளில் ரசம் முதல் இறைச்சி வரை பல உணவுகளுக்கு காரத்தையும் மணத்தையும் கொடுக்கும் மிளகு, ஒரு தவிர்க்க முடியாத மசாலாப் பொருள். மிளகில் உள்ள 'பைப்பரின்' (Piperine) என்ற சேர்மம்தான் அதன் தனித்துவமான காரத்தன்மைக்குக் காரணம்.
ஆனால், சந்தையில் இதன் விலையைக் கருத்தில்கொண்டு, சில சமயங்களில் பப்பாளி விதைகள் போன்ற தரம் குறைந்த பொருட்கள் இதில் கலக்கப்படுகின்றன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), தனது DART முன்னெடுப்பின் மூலம் இதுபோன்ற கலப்படங்களை வீட்டிலேயே கண்டறிய சில எளிய வழிகளைப் பரிந்துரைத்துள்ளது.
மிளகில் பப்பாளி விதைகள் கலந்திருக்கிறதா என்பதை அறிய, ஒரு கிளாஸ் தண்ணீரே போதுமானது. ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் சில மிளகு மணிகளைப் போட்டுக் கலக்க வேண்டும். தரமான, முதிர்ந்த மிளகு மணிகள் பொதுவாக கனமாக இருப்பதால், அவை தண்ணீரின் அடியில் சென்று தங்கிவிடும்.
மாறாக, பப்பாளி விதைகள் எடை குறைவாக இருப்பதால், அவை நீரின் மேற்பரப்பில் மிதக்கத் தொடங்கும் என FSSAI குறிப்பிடுகிறது. ஆனாலும், மிதக்கும் எல்லாமே கலப்படம் என்று கண்ணை மூடிக்கொண்டு முடிவு செய்துவிட முடியாது. சில சமயங்களில் முழுமையாக முதிராத அல்லது அதிகம் காய்ந்துபோன மிளகு மணிகளும் எடை குறைவாக இருப்பதால் மிதக்க வாய்ப்புள்ளது. எனவே, இது ஒரு ஆரம்பகட்ட சோதனை மட்டுமே.
தண்ணீரில் மிதந்த மணிகளையோ அல்லது சந்தேகத்திற்குரிய மிளகு மணிகளையோ ஒரு வெள்ளைத்தாளில் வைத்து உற்றுப் பார்த்தால் வித்தியாசத்தைக் கண்டறியலாம். உண்மையான மிளகு, சுருக்கமான மேற்பரப்புடன் பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படும். ஆனால், பப்பாளி விதைகள் சற்று மென்மையான, ஓவல் வடிவ தோற்றத்துடன், பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
சந்தேகமான ஒரு மிளகு மணியை விரலால் நசுக்கினாலே அதன் தனித்துவமான காரமான மணம் வெளிப்படும். கலப்பட விதைகளில் இந்த மணம் இருக்காது. மேலும், ஒரு மிளகை உடைத்துப் பார்த்தால், அதன் உள்ளமைப்பு உண்மையான மிளகிலிருந்து வேறுபடுவதையும் கவனிக்க முடியும்.
மிளகுத்தூளில் மரத்தூள் போன்ற பிற பொடிகள் கலக்கப்பட்டிருந்தால், அதை வெறும் கண்ணால் கண்டறிவது மிகவும் கடினம். ஆனால், முழு மிளகாக வாங்கும்போது அதன் வடிவம், நிறம், மேற்பரப்பு ஆகியவற்றை எளிதாகச் சோதிக்க முடியும். இதனால், முடிந்தவரை நம்பகமான கடைகளில் முழு மிளகாக வாங்கி, தேவைப்படும்போது வீட்டிலேயே அரைத்துப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது, அதன் லேபிளில் FSSAI உரிமம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்ப்பது அவசியம். மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மட்டும் ஒரு பொருளை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் செய்யும் சோதனைகளில் கலப்படம் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், அதனை உறுதிப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகப் பரிசோதனையே இறுதியான தீர்வாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.