
நடைபயிற்சி என்றாலே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மந்திர சாவி தான். ஒரு நபர் தினமும் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அவருடைய வாழ்நாள் அதிகமாகும். ஏனென்றால் அவருடைய ஆயுள் நீட்டிக்கும் சக்தி நடைபயிற்சிக்கு உண்டு. தினசரி நடந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவை கட்டுக்குள் வரும். எடையை குறைக்க சுறுசுறுப்பான நடைபயிற்சி கைகொடுக்கும். புற்றுநோய், டைப் 2 நீரழிவு நோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்பை நடைபயிற்சி குறைக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க நடைபயிற்சி மாதிரியான சிறந்த பயிற்சி வேறு இருக்க முடியாது. நீங்கள் நாள்தோறும் 2 கிலோமீட்டர் சுறுசுறுப்பாக நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
இதய ஆரோக்கியம்!
நாள்தோறும் இரண்டு கிலோமீட்டர் வேகமாக நடந்தால் உங்களுடைய சுவாச உறுப்புகள் நன்றாக செயல்படும். நுரையீரல் நன்கு இயங்குவதை தூண்ட வேகமாக நடக்கலாம். இதய ஆரோக்கியமும் மேம்படுவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. நீங்கள் வேகமாக நடக்கும் போது இதயத்தில் துடிப்பு அதிகமாகி, ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. இதயம், நுரையீரலின் செயல்திறனை அதிகப்படுத்த நடைபயிற்சி உதவும்.
ரத்த அழுத்தம் குறையும்!
நாள்தோறும் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வேகமாக நடந்தால் உங்களுடைய ரத்த அழுத்தம் குறையும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுகிறது. உங்களுடைய மனநிலையும் மேம்பட்டு மன அழுத்தமின்றி இருக்க உதவுகிறது.
இதையும் படிங்க: மெதுவாக நடந்தால் உடல் எடை குறையுமா?
எடை குறைப்பு:
இரண்டு கிலோமீட்டர் தினமும் நடப்பதால் உங்களுடைய உடலில் உள்ள கொழுப்பு கரைய உதவுகிறது. அதிக ஆற்றல் செலவாகி வளர்ச்சிதை மாற்றம் அதிகரிப்பதால் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நாள்தோறும் இரண்டு கிலோமீட்டர் நடப்பதை பழக்கப்படுத்திக் கொண்டாலே போதும். மற்ற பயிற்சிகள் கூட வேண்டாம்.
பக்கவாதம் வராது!
தினமும் வேகமாக நடப்பதால் உங்களுடைய உடல் சுறுசுறுப்பாக செயல்படும். மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் அதன் செயல்திறனும் அதிகரிக்கும். நாள் முழுக்க சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது.
இதையும் படிங்க: வாக்கிங் மூளையை பாதிக்குமா? இந்த 'ட்விஸ்ட்' யாருக்கும் தெரியாது!!
தசைகள் வலிமை!
வேகமாக நடக்கும் போது உங்களுடைய தசைகளின் இழப்பு தடுக்கப்படுகிறது. தொடர்ந்து நடப்பவர்கள் முதுமை அடையும் போது அவர்களுடைய உடல் தசைகள் வலுவாக காணப்படும். நடக்காதவர்களை காட்டிலும் நடப்பவர்கள் ஆரோக்கியமாக இயங்குவார்கள்.
மனநலம் மேம்படும்!
நடை பயிற்சி செய்யும் போது மனநிலையை சீராக்கும் எண்டோபிண்கள் வெளியிடப்படுகின்றன. இது உங்களுடைய மனநிலையை மேம்படுத்துவதால் பதற்றம், கவலை, மன அழுத்தம் ஆகியவை குறைகிறது.
மூட்டு ஆரோக்கியம்!
தினமும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுடைய மூட்டுகள் உறுதியாகின்றன. மூட்டுகளில் உள்ள வலிகள் படிப்படியாக குறைய தொடங்குகின்றன. வேகமாக நடைபயிற்சி செய்வது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, மூட்டுகளையும் ஆரோக்கியமாக மாற்றும்.
செரிமானம் மேம்படும்!
நாள்தோறும் சாப்பிட்ட பின் குறுநடை போடுவது உங்களுடைய செரிமானத்தை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நல்ல தூக்கம்:
ஒருவரின் தூக்கம் மேம்பட்டால் அவருக்கு பல நோய்கள் குணமாகிவிடும். பல நோய்களை வரும்முன் தடுக்கலாம். ஆழ்ந்த தூக்கம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியமான ஒன்று. தினமும் காலையில் சுறுசுறுப்பாக இரண்டு கிலோமீட்டர் நடைபயிற்சி செய்பவர்களுக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் ஏற்படும்.