
இஞ்சியை உணவு தயாரிப்பில் அதிகம் பயன்படுத்துவார்கள். இஞ்சி இல்லாத அசைவ உணவுகளே இல்லை என்றே சொல்லலாம். இஞ்சி சேர்க்காத அசைவ உணவுகள் சுவை தனித்து தெரியும். ஏனெனில் இஞ்சி இல்லாதது ஒரு குறையாகவே இருக்கும். அந்த அளவுக்கு அசைவ உணவுகளில் தவிர்க்க முடியாததாக இஞ்சி உள்ளது. அது மட்டுமில்லாமல் கடினமான உணவுகளை செரிக்கவும் இஞ்சி உதவுகிறது. ஆனால் வீட்டு வைத்தியங்களில் இஞ்சி சேர்க்க மாட்டார்கள். மருத்துவ குணங்களுக்காக சுக்கு தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.
கை வைத்தியம் என்றாலே சுக்குதான். இதனை மருத்துவ காரணங்களுக்கு அதிகமாகவும், தின்பண்டங்களில் சிறிதளவிலும் பயன்படுத்துவார்கள். சுக்கு என்பது இஞ்சியின் காய்ந்த வடிவம். இரண்டும் ஒரே பொருள் தான் என்றாலும், உலர்ந்த பின்னர் அதன் குணநலன்கள் வேறுபடும். இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளது? எதை உண்பது மிகவும் நல்லது என இங்கு தெரிந்துகொள்வோம்.
பண்டைய காலங்களில் இருந்து இஞ்சியை இந்தியாவில் பரவலாக பயன்படுத்தி வருகிறோம். சீனாவிலும் இந்தியாவை போல இஞ்சியை விளைவித்து பயன்படுத்துகின்றனர். கி.மு நான்காம் நூற்றாண்டில் இருந்தே இஞ்சி சுவாசம், பல் வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக சீன குறிப்புகள் நமக்கு சொல்கின்றன. அதை போல இருமல், சளி தொல்லைக்கு இஞ்சி பயன்பட்டுள்ளது.
இஞ்சியின் பயன்கள்:
இஞ்சியில் ஜிஞ்சரால், ஷோகோல் போன்ற சேர்மங்கள் உள்ளன. இந்த பொருள்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன. இவை செரிமானத்திற்கு உதவும் அருமருந்து. ஒரு இஞ்சி துண்டினை எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து உண்பதால் உமிழ்நீர் சுரப்பு அதிகமாகும். இதனால் செரிமானம் நன்கு நடைபெறும். செரிமான கோளாறுகள் சரியானாலே உடலில் இருக்கிற நச்சுக்கள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். உருளை கிழங்கு போன்ற உணவு பொருள்களில் உள்ள வாயுவை குறைக்க இஞ்சி உதவுகிறது.
இஞ்சியின் காரத்தன்மையும், வாசனையும் சமையலுக்கு தேவையாக உள்ளது. அசைவ மசாலாவில் இஞ்சி முக்கியம். சில சைவ உணவிலும் சேர்க்கப்படுகிறது. வெறும் சுவைக்காக மட்டும் இஞ்சி உணவில் சேர்க்கப்படுவதில்லை. இதனுள் ஊட்டச்சத்துக்கள் பொதிந்துள்ளன. இஞ்சி உண்பது நுரையீரலில் சேர்ந்துள்ள சளியை நீக்க உதவும். இதனால், இருமல் குறையும். தொண்டை வலியும் குணமாகும்.
இஞ்சியை குமட்டலை தவிர்க்க பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் காலையில் சுகவீனம் மற்றும் பல்வேறு காரணங்களால் குமட்டல் ஏற்படும். இதனை இஞ்சி தணித்துவிடும். சின்ன துண்டு இஞ்சியை தேநீரில் சேர்த்து அதை இறுதியில் மென்று சாப்பிட்டால் நல்லது.
இஞ்சியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நாள்பட்ட நோய்களுடைய அபாயத்தை குறைத்துவிடும். இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
சுக்கின் நன்மைகள்:
இஞ்சி அளவுக்கு சுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. இதனை மருத்துவ காரணங்களுக்காக எப்போதாவது ஒரு முறை தான் பயன்படுத்துகிறார்கள். கை வைத்தியத்தில் சுக்கை தவிர்க்கவே முடியாது. தின்பண்டங்களில் எதுக்கு சேர்ப்பது அப்பண்டத்தின் சுவை மேலும் கூட்டுகிறது. செரிமானத்திற்கும் உதவுகிறது. சுக்கினை பொடியாக உணவில் சேர்த்தால் சுவையை மாற்றாமல் சுவையை மேலும் அதிகரிக்கும். வீட்டிலேயே சுக்கு பொடியை தயார் செய்து வைத்தால் தேவைப்படும்போது கசாயத்தில் சேர்க்கலாம்.
உலர்ந்த இஞ்சியான சுக்கு உடலில் செரிமானத்தை தூண்டும். அஜீரண கோளாறுகளை முற்றிலும் நீக்கும். வாயுத்தொல்லை இருப்பவர்கள் சுக்கு காபி குடிக்கலாம். ஏற்கனவே இரைப்பை, குடல் கோளாறுகளால் அவதிபடுவர்களும் சுக்கை உண்ணலாம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுக்கில் உள்ளன. இது அழற்சியை நிர்வகிக்கும். தசை, மூட்டு வலியை குணமாக்க சுக்கு உதவுகிறது.
விஷத்தை முறிக்க சுக்கு உதவும். சுக்கு சிறிய துண்டு, 10 மிளகு, ஒரு வெற்றிலை மூன்றையும் சேர்த்து மென்று சாப்பிட்டு, ஒரு தம்ளர் தண்ணீரை குடித்தால் தேள் கடி விஷம் முறியும்.
சுவாசக் கோளாறுகளை சுக்கு சரி செய்யகூடியது. இருமல், சளி மற்றும் தொண்டைபுண் போன்றவற்றை குணப்படுத்தும். இருமலுக்கு சுக்கு, அதிமதுரம் ஆகியவற்றை அரைத்து பொடியாக்கி 1 கிராம் மட்டும் தேனில் கலந்து சாப்பிடலாம்.
சுக்கினை அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும். கழுத்தில் பூசினால் தொண்டை வலி (tansilitis) குணமாகும். வலிக்கும் மூட்டுகள் மீது பூசினால் மூட்டு வலி, வீக்கம் குறையும்.
இதையும் படிங்க: Dry ginger: சுக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! இஞ்சியை விடவும் இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சுக்கு அல்லது இஞ்சி எது நல்லது?
இஞ்சியை உலர்த்துவதால் அதன் ஈரப்பதம் நீங்கி சுக்காக மாறும். இந்த செயல்முறையில் இஞ்சி தன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை அதிகரிக்கிறது. உலர வைக்கும் முன்பே இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இருக்கும். ஆனால் சமைக்கும் போது அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் குறைகின்றன என நேஷனல் லைப்ரேரி ஆப் மெடிசின் (National Library of Medicine) தெரிவிக்கிறது. இதன் மூலம் இஞ்சியை விட சுக்கில் தான் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இருப்பதை அறியலாம்.
2013ஆம் ஆண்டு பப்மெட் செண்ட்ரலில் ஒரு ஆய்வு வெளியானது. அதில் மனித சுவாச மண்டலத்தில் வைரஸ் தாக்குதலின் மீது இஞ்சியும் சுக்கும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் இஞ்சி சுவாச மண்டலத்தை பாதுகாக்க உதவும் என உறுதியானது. சுக்கு அப்படியான விளைவை ஏற்படுத்தாது எனவும் தெரிய வந்துள்ளது.
சுக்கு வாதத்தை சமநிலைப்படுத்த உதவும் என ஆயுர்வேதம் சொல்கிறது. பருவகாலங்களில் சுவாச பிரச்சனைக்கு சுக்கை பயப்படுத்தலாம். எதிர் விளைவுகள் உண்டாகாது. ஆனால் இஞ்சியை அல்சர் இருப்பவர்கள் உண்பது நல்லதல்ல. இதன் காரத்தன்மை எரிச்சலை உண்டு பண்ணும்.
சுக்கு, இஞ்சி இரண்டுமே நன்மைகள் நிறைந்தது. அவரவருக்கு ஏற்படி அதனை பயன்படுத்தினால் நன்மை பெறலாம்.
இதையும் படிங்க: காலையில வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடிக்கும் நபரா? அப்ப 'இத' பாருங்க!