
நாட்டின் பல இடங்களில் பருவமழை தொடங்கி உள்ளதால், இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, சாலை மறியல் போன்றவை ஏற்படுகிறது. நகர்ப்புறங்களைப் பொறுத்தமட்டில், தண்ணீர் தேங்குவது மற்றும் நீண்ட மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பது என்பது உண்மைதான்.
ஆனால் மலைப் பிரதேசங்களை பொறுத்த வரை நிலச்சரிவுகள் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. பருவமழையின் போது ஆற்றின் கரையோரங்களும் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். மோசமான வானிலையில் பலரும் பயணம் செய்ய விரும்ப மாட்டார்கள் என்றாலும், சிலர் பருவ மழைக்காலங்களில் சாகச பயணங்களை மேற்கொள்வார்கள்.
எனவே ஒரு பயணத்தைத் திட்டமிடும் முன், பயணிகள் சாத்தியமான ஆபத்துகளைப் பற்றி அறிந்திருப்பது முக்கியம். அந்த வகையில் இந்த பருவமழை காலத்தில் இந்த 8 சுற்றுலா தலங்களுக்கு இப்போது பயணம் செய்வது ஏன் ஆபத்தானது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பல முக்கிய சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. ஆனால் கேரளாவில் பருவமழை காலத்தில் மிக கனமழை பெய்யும். இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவை ஏற்படும். குறிப்பாக மூணாறு மற்றும் வயநாடு போன்ற மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
சாலைகள் அடிக்கடி தடைபடுவதால், இந்த மழைக்காலத்தில் கேரளாவுக்கு பயணம் செல்வது ஆபத்தானதாக மாறும். கடந்த மாதம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு பேரழிவை ஏற்படுத்தியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய சுற்றுலா இடங்களில் கேரளாவும் ஒன்று.
மழைக்காலத்தில் மகாராஷ்டிராவின் கடலோர பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவும். ஏனெனில் இந்த பகுதிகளில் மிக அதிக மழை பெய்யும். மும்பை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படுவதுடன், நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன. நகரங்களிலும் மழை காலத்தில், தண்ணீர் தேங்குவது மற்றும் பல மணிநேர போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணம் சிக்கலாக இருக்கும்.
அசாமில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது வெள்ளம் ஏற்படுகிறது. குறிப்பாக பிரம்மபுத்திரா நதியைச் சுற்றி. பருவத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கி, சாலை மற்றும் ரயில் பயணத்தை சவாலாகவும், அபாயகரமானதாகவும் மாற்றுகிறது. கனமழை காரணமாக காசிரங்கா மற்றும் மனாஸ் போன்ற சுற்றுலாத்தலங்களும் மூடப்படும். எனவே மழைக்காலத்தில் அசாமிற்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது.
உலகிலேயே அதிக மழைப்பொழிவு இருக்கும் இடங்களில் மேகாலாயாவும் ஒன்றாகவும். மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி மற்றும் மவ்சின்ராம் ஆகிய இடங்களை பருவமழையின் போது பார்வையிட மிகவும் ஆபத்தான முயற்சியாகும். மழை நாட்களில் இந்த இடங்களுக்கு போக்குவரத்து வசதிகளே குறைவு. மழைக்காலத்தில் இந்த இடங்களுக்குச் சென்றால், குறிப்பாக மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் போது, தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பீகாரில், குறிப்பாக வடக்குப் பகுதிகளில் மழை காலத்தில் அதிக மழை பெய்யும் என்பதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் ஆறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். கிராமங்கள் மற்றும் சாலைகள் பெரும்பாலும் வெள்ளக்காடாக மாறும். இதனால் அங்கு பாதுகாப்பாக பயணிக்க இயலாது என்பதால் மழைக்காலத்தில் அங்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது.
உத்தரகாண்டின் மலைப் பகுதியில் மழைக்காலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன் நிலச்சரிவு ஏற்படுகிறது.. கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித யாத்திரை பாதைகள் ஆபத்தான நிலச்சரிவுகளால் அடிக்கடி மூடப்படும். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் பயணங்கள் ஆபத்தாக மாறும்.
மேற்கு வங்காளத்தின் வடக்கு மலைப்பகுதிகளான டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் ஆகிய இடங்களில் பருவமழை காலத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுவது பொதுவான நிகழ்வாக மாறிவிட்டது. டீஸ்டா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் ஆற்றின் அருகே எந்த நடவடிக்கையும் ஆபத்தானதாக மாறும். கொல்கத்தா உள்ளிட்ட சமவெளிப் பகுதிகள் பருவமழை காலத்தில் வழக்கமான வெள்ளத்தை எதிர்கொள்வதால் பருவ மழை காலத்தில் அங்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது.
நாகாலாந்தின் மலைப்பாங்கான பகுதிகள் பருவமழையின் போது அதிக அபாயங்களை எதிர்கொள்கின்றன. திமாபூர் மற்றும் கோஹிமா போன்ற நகரங்களுக்கு இடையே உள்ள முக்கிய பாதைககளில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகிறது. இந்த நிலச்சரிவுகள் செயல்பாட்டில் அருகிலுள்ள பல பகுதிகள் துண்டிக்கப்படுவதால் எந்த வகையிலும் பயணம் செய்ய இயலாது. எனவே பருவ மழைக்காலத்தில் நாகாலாந்தின் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது.