
இன்றைய காலத்தில் கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளை பார்க்க முடியாது. எல்லோருடைய வீடுகளிலும் கேஸ் அடுப்பு கண்டிப்பாக இருக்கும். இதில் சமைத்தால், சமையலை மிகவும் எளிதாக்கிவிடும். இதனால் தான் இது இல்லத்தரசிகளின் நல்ல நண்பன் என்று சொல்லப்படுகிறது. சமைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென கேஸ் தீர்ந்து விட்டால் கூட இல்லத்தரசிகளுக்கு சமைப்பது பெரும் தலைவலியாகிவிடும். அந்த அளவிற்கு கேஸ் மக்கள் மத்தியில் முக்கிய பங்காக வகிக்கிறது.
கேஸ் அடுப்புக்கு மிகவும் முக்கியமாக இருப்பது பர்னர்தான். தூசி மற்றும் அழுக்கு நிறைந்த கேஸ் அடுப்பு பர்னரை மட்டுமல்லாமல் கேஸ் அடுப்பில் சமைக்கும் சமையலையும் பாதிக்கும் தெரியுமா? இதனால் சில சமயங்களில் ஆபத்து கூட வரலாம்.
இதையும் படிங்க: 1 ரூபாய் ஷாம்பு வைத்து மோசமான நிலையில் இருக்கும் பூஜை பொருள்களை கூட ஜொலிக்க வைக்கலாம்!!
கேஸ் ஸ்டவ்வை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அதில் எண்ணெய் பசை, கிரீஸ் குவிய தொடங்கும். இன்னும் சொல்லப் போனால் சில சமயங்களில் சமைக்கும் போது உணவு வெளியில் சிந்தி பர்னர் மீது விழுந்து அதன் ஓட்டையில் அடைத்துக்கொள்ளும். இதனால் பர்னரில் இருந்து வரும் நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். அல்லது ஒரேடியாக அணைந்து விடும். எனவே பர்னரை அவ்வப்போது சுத்தம் செய்தால் இந்த சிக்கல் வராது. ஆனால், கேஸ் ஸ்டவ்வை மற்றும் பர்னரை சுத்தம் செய்வது கடினமான வேலை என்று பலர் நினைக்கிறார்கள்.
ஆனால், உண்மையில் அப்படியில்லை. கேஸ் ஸ்டவ்வை அவ்வப்போது சுத்தம் செய்து வந்தால் அதிக நேரம் எடுக்காது, சுலபமான முறையில் சுத்தம் செய்து விடலாம் மற்றும் கையும் வலிக்காது. எனவே, வீட்டிலேயே கேஸ் மற்றும் பர்னரை சுலபமாக சுத்தம் செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பற்றினால் போதும். அதை பார்ப்பதற்கு புதுசு போல் பளபளப்பாக இருக்கும்.
கிளீனர் தயாரிக்கும் முறை :
ஒரு பைசா செலவில்லாமல், கேஸ் அடுப்பு மற்றும் பர்னரை சுத்தம் செய்ய வீட்டிலேயே கிளீனர் தயாரிக்கலாம். இதற்கு ஒரு ஸ்பிரே பாட்டிலில் பேக்கிங் சோடா 2 ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் கொஞ்சம் தண்ணீர் மற்றும் வினிகர் சேர்த்து பாட்டில் மூடி, நன்றாக குலுக்கி கொள்ளுங்கள். பேக்கிங் சோடா நன்றாக கரைந்து இருக்க வேண்டும். இப்போது கேஸ் அடுப்பு மற்றும் பர்னரை சுத்தம் செய்வதற்கான கிளீனர் தயார்.
கேஸ் அடுப்பை சுத்தம் செய்யும் முறை :
கேஸ் அடுப்பை சுத்தம் செய்வதற்கு முதலில் தயாரித்து வைத்த கிளீனரை அடுப்பின் மீது தெளித்துக் கொள்ளுங்கள். அதை எல்லா இடமும் பரப்பி, சிறிது நேரம் அப்படியே ஊற வைக்கவும். 15 நிமிடம் கழித்து, கடற்பாசி கொண்டு கேஸ் அடுப்பை சுத்தம் செய்யுங்கள். கேஸ் அடுப்பை நன்றாக சுத்தம் செய்ததும், ஒரு ஈரமான மற்றும் சுத்தமான துணியை கொண்டு கேஸ் அடுப்பை நன்றாக துடைக்கவும்.
இப்படி நீங்கள் துடைக்கும் போது அடுப்பின் மீது இருக்கும் எண்ணெய் பசை பிசுபிசுப்பு போன்ற அனைத்தும் நீங்கி, உங்கள் கேஸ் அடுப்பு பார்ப்பதற்கு புதியது போலாக இருக்கும்.
பர்னர் சுத்தம் செய்யும் முறை :
பர்னரை சுத்தம் செய்ய, ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அடுத்து அதில் துருப்பிடித்த பர்னரை சுமார் 30 நிமிடம் அப்படியே வைக்கவும். 30 நிமிடம் கழித்து அதிலிருந்து பர்னரை எடுத்து சுத்தமான தண்ணீரைக் கொண்டு கழுவுங்கள்.
இதையும் படிங்க: வீட்டில் ஒட்டடை வராமல் இருக்கணுமா? தண்ணீருடன் இதை கலந்து ஒரு முறை பயன்படுத்தினால் போதும்!!
அதன்பிறகு ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கரைக்கவும். இந்த பேஸ்ட்டை பர்னர் மீது தடவி சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து ஒரு டூத் பிரஷ் அல்லது ஸ்கரப் பிரஷ் கொண்டு பர்னரின் ஓட்டைகளில் இருக்கும் அழுக்குகளை அகற்றுங்கள். பிறகு தண்ணீரால் பர்னரை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் பர்னர் பளபளப்பாக இருக்கும். பிறகு பர்னரை அடுப்பில் வைத்து ஆன் செய்து பாருங்கள், அதிலிருந்து வரும் நெருப்பு முன்பு போல் அல்லாமல் ரொம்பவே பிரகாசமாக எரியும்.
குறிப்பு :
நீங்கள் தினமும் சமைக்கும் போது, சமைத்து முடித்த பிறகு ஈரமான துணியை கொண்டு துடைக்கவும். இப்படி நீங்கள் செய்தால் உங்களது கேஸ் அடுப்பு மற்றும் பர்னர் சீக்கிரம் அழுக்காகாது. பார்ப்பதற்கு எப்போதும் புதுசாகவே இருக்கும்.