மணமணக்கும் மட்டன் பிரியாணி செய்வது கடினம் அல்ல, கொஞ்சம் அக்கறையும் பொறுமையும் இருந்தால் போதும். சரியான பொருட்கள், சரியான நேரம் மற்றும் மெதுவான சமையல் முறையில் சுவையான பிரியாணியை நீங்களே செய்யலாம்!
மட்டனை சுவையாகவும் மிருதுவாகவும் மாற்ற, பச்சைப் பப்பாளி விழுது, தயிர், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் மசாலாக்களுடன் நன்கு கலந்து ஊற வைக்கவும். குறைந்தது 4–5 மணி நேரம் மாரினேட் செய்தால், மசாலா கறிக்குள் நன்றாக ஊடுருவி, மட்டன் மென்மையாகி சுவையான பிரியாணி தயாராகும்.
25
பாசுமதி அரிசி பக்குவம்: எலுமிச்சை சாறு சேருங்கள்.!
பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக வைத்திருக்க, முதலில் அரிசியை நன்றாகக் கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் அதிக அளவு தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஊறிய அரிசியை சேர்த்து வேகவைக்கவும். அரிசி முழுமையாக வேகாமல் சுமார் 90% மட்டுமே வெந்த நிலையில் வடிகட்டுவது முக்கியம். சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இதனால் அரிசி நீளமாகவும் உதிரியாகவும் இருக்கும். வடித்த பிறகு உடனடியாக கிளறாமல், சில நிமிடங்கள் ஆறவிடவும். பிரியாணி தம் போடும்போது மீதமுள்ள 10% வெந்துவிடும் என்பதால், சாதம் குழையாமல் சரியான பக்குவத்தில் கிடைக்கும்.
35
பொன்னிறமாக வறுத்த வெங்காயம் தரும் ருசி
கடை ஸ்டைல் பிரியாணியின் சுவை மற்றும் மணத்திற்கு பெரெஸ்தா, குங்குமப்பூ பால், கேவ்ரா மற்றும் ரோஸ் வாட்டர் முக்கியமானவை. மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக, மொறுமொறுப்பாக வறுத்து பெரெஸ்தாவாக தயாரிக்கவும். பிரியாணியின் மேல் குங்குமப்பூ கலந்த பாலை ஊற்றி, சிறிதளவு கேவ்ரா மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்தால் நறுமணம் அதிகரிக்கும்.
பிரியாணியின் ஒவ்வொரு பருக்கையிலும் கறியின் சுவையும் நறுமணமும் நன்றாக கலக்க, சரியான லேயரிங் முறை மிகவும் முக்கியம். பெரிய அடிகனமான பாத்திரத்தில் முதலில் மட்டன் கறியை பரப்பி, அதன் மேல் வேகவைத்த பாசுமதி சாதத்தை சமமாக அடுக்கவும். பின்னர் சிறிதளவு நெய், பொன்னிறமாக வறுத்த பெரெஸ்தா மற்றும் குங்குமப்பூ பாலை சேர்க்கவும். இதே முறையில் மீண்டும் கறி, சாதம், நெய், பெரெஸ்தா என அடுக்குகளை அமைக்கலாம். இறுதியாக பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் தம் வைத்து வேகவிடவும். இதனால் கறியின் சுவை சாதத்தில் நன்றாக ஊடுருவி, ஒவ்வொரு பருக்கையும் தனித்தனியாகவும் சுவையாகவும் இருக்கும்.
55
தம் போடும் கலை தெரிஞ்சா நீங்க கிங்கு
தம் போடும் முறையே பிரியாணியின் சுவையை அதிகரிக்கும் முக்கியமான ரகசியமாகும். கறி மற்றும் சாதத்தை அடுக்கிய பிறகு, பாத்திரத்தை இறுக்கமாக மூடி அதன் விளிம்புகளை மாவு கொண்டு நன்றாக சீல் செய்யவும். பின்னர் குறைந்த தீயில் சுமார் 40–50 நிமிடங்கள் மெதுவாக தம் போட வேண்டும். இதனால் மட்டன் நன்கு வெந்து, மசாலாவின் சுவையும் நறுமணமும் சாதம் முழுவதும் பரவும். மூடியை அடிக்கடி திறக்காமல் இருப்பது அவசியம். அடிப்பகுதியில் சாதம் ஒட்டாமல் இருக்க, பாத்திரத்தை நேரடியாக தீயில் வைப்பதற்குப் பதிலாக தவா மீது வைத்து தம் போடலாம். இறுதியில் அடுப்பை அணைத்து சில நிமிடங்கள் ஓய்வெடுக்க வைத்து பரிமாறினால், மணமும் சுவையும் நிறைந்த சுவையான தம் பிரியாணி கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.