
நடை பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடிய மிதமான பயிற்சியாகும். தினமும் ஒரே மாதிரி நடப்பதை காட்டிலும் ஒவ்வொரு நாளும் நடக்கும்போது சின்ன சின்ன மாற்றங்களை செய்வது கூடுதல் பலன்களை தரும். உதாரணமாக தினமும் ஒரே தொலைவில் நடப்பதை காட்டிலும் சற்று தொலைவில் நடப்பது நல்லது. நடையின் வேகம், நடையில் தோரணை, தொலை, நடக்கும் நிமிடங்கள் போன்றவற்றை அவ்வப்போது மாற்றலாம். இந்த பதிவில் 2 மடங்கு நன்மையை வழங்கும் இடைவேளை நடைபயிற்சி குறித்து காணலாம்.
இண்டர்வல் வாக்கிங் (Interval walking) என சொல்லப்படும் இடைவேளை நடைபயிற்சி அதி தீவீர பயிற்சியாகும். குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை மாறி மாறி நடக்கும் நடைபயிற்சியாகும். இந்த பயிற்சியால் நீங்கள் வழக்கமாக நடப்பதை விடவும் இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும். நடைபயிற்சிக்கு முன் வார்ம்-அப் பயிற்சிகளை செய்து உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்க வேண்டும். பின்னரே நடக்கத் தொடங்க வேண்டும்.
ஜப்பானிய முறையில் முதல் 3 நிமிடங்கள் அதிவேகமாகவும் அடுத்த 3 நிமிடங்கள் மித வேகமாகவும் நடக்கிறார்கள். உங்களால் அதை பின்பற்ற முடியாவிட்டால் நீங்கள் 30 வினாடிகள் மெதுவாக நடந்துவிட்டு பின்னர் 30 வினாடிகள் வேகமாக நடக்கலாம் அல்லது 30 வினாடிகள் மெதுவாக (ஜாகிங்) ஓடலாம். நீங்கள் கூடுதல் பலனை பெற விரும்பினால் சுமார் 1 முதல் 5 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். பின்னர் 60 வினாடிகள் ஓட வேண்டும். உங்களுடைய உடலுக்கு ஏற்றவாறு மெதுவாக, மிதமான வேகத்தில் ஓடலாம். இப்படி 30 முதல் 40 நிமிடங்கள் மாறி ஓட்டம் நடையுமாக பயிற்சி செய்யலாம். நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்றபடி, நடைக்கும், ஓட்டத்திற்கும் இடையேயான இடைவெளிகளையும், அதன் வேகத்தையும் மாற்றிக் கொள்ளலாம். கட்டாயம் வேகமாக தான் ஓட வேண்டும், கட்டாயம் மெதுவாகத்தான் நடக்க வேண்டும், இப்படி எந்த வரையறைகளும் இல்லை. உங்களுடைய உடலுக்கு ஏற்றவாறு இந்த பயிற்சியினை மாறி மாறி செய்யலாம்.
இதையும் படிங்க: காலையா, மாலையா? எப்போது நடப்பது சிறந்த பலன் தரும் தெரியுமா?
ஆயுள் அதிகமாகும்!
உங்களுடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களின் அபாயத்தை குறைத்து ஆயுளைக் கூட்டுகிறது. இதயம், எலும்பு, தசைகள், சுவாச மேம்பாடு என அனைத்து உறுப்புகளையும் மேம்படுத்தி புதிய நோய்கள் வராமல் தடுக்கவும் இந்த இடைவேளை நடைபயிற்சி உதவுகிறது.
இதய ஆரோக்கியம்:
இந்த நடைபயிற்சியை அடிக்கடி செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இப்பயிற்சி உதவும். தசைகளை வலுவாக்க்கும்.
இதையும் படிங்க: வெறும் 15 நிமிட வாக்கிங் அற்புதம்.. சாப்பிட்டதும் நடந்தால் இத்தனை நன்மைகளா?
வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இடைவேளை நடைபயிற்சி செய்வதால் உடலில் உள்ள அதிக கொழுப்பை எரிக்கலாம். இதனால் எடையை குறைக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் கவனம்:
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது. வகை 2 நீரிழிவு நோயாளிகள் இந்த பயிற்சியை மிதமான வேகத்தில் கூட செய்யலாம். அதாவது 2 நிமிடங்கள் ஜாகிங் செய்துவிட்டு, 5 நிமிடங்கள் நடக்கலாம்.
ஆழ்ந்த தூக்கம்:
நடைபயிற்சியும், ஓட்டமும் கலந்துள்ளதால் உடல் நன்கு இயங்கும். இரவில் உங்கள் தூக்கத்தின் தரம் மேம்படும். ஆழ்ந்த தூக்கம் கிடைத்தால் மனச்சோர்வு நீங்கும். மன அழுத்தம் குறைவது பல நோய்களை கட்டுக்குள் கொண்டு வர உதவும்.