
பொதுவாக காலையில் எழுந்ததும் பல் தேய்த்த பின்னர் தான் எதை வேண்டுமானாலும் சாப்பிட வேண்டும் என வீட்டில் சொல்லி வளர்ப்பார்கள் அதைத்தான் நாமும் காலம் காலமாக பின்பற்றி வருகிறோம் ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பல் துலக்காமல் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் உடலின் பல நல்ல மாற்றங்களும் ஏற்படும்.
பல் துலக்குதல் மிக முக்கியமான சுகாதார நடவடிக்கை. இது நம் வாய் சுகாதாரத்தை பேணுகிறது. காலை மட்டுமின்றி இரவு உணவு சாப்பிட்ட பின்னரும் கூட பற்களை சுத்தப்படுத்தி விட்டு தான் உறங்கச் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கின்றன.
பொதுவாக காலையில் எழுந்ததும் எல்லோரும் முதலில் செய்ய நினைக்கும் காரியம் காலை கடன்களை செலுத்துவது தான். அதன் பிறகு பல் தேய்த்து விட்டு தான் தண்ணீர் அருந்துவது, தேநீர், காபி போன்றவற்றை குடிப்பது என மரபாக எல்லோரும் பின்பற்றி வருகிறோம்.
சிலர் பல் துலக்குவதற்கு முன்பே டீ, காபியை அருந்தி விட்டு தான் தங்கள் நாளை தொடங்குவார்கள். சிலருக்கு காலையில் டீ, காபி இருந்தால்தான் காலை கடன்களையே முடிக்க முடியும். ஆனால் இப்படி பல் துலக்காமல் சாப்பிடுவது, டீ, காபி குடிப்பது பற்களில் உள்ள எனாமலை அரித்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு, காபி, டீ போன்றவற்றை பல் துலக்காமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் தண்ணீர் மட்டும் அருந்தலாமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆம் அருந்தலாம் என்பதே பதில்.
இதையும் படிங்க: திருமண மண்டபத்துல சாப்பிடலாம்... ஆனா வாய் மட்டும் கொப்பளிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
காலையில் பற்களை தேய்க்கும் முன்பாக எந்த உணவு பொருளையும், உண்ணவோ, குடிக்கவோ கூடாது என்பது உண்மைதான். ஆனால் பல் துலக்குவதற்கு முன்பாக தண்ணீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அது என்ன மாதிரியான நன்மைகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மை செய்யும் அருமையான பழக்கமாகும். பல் தேய்ப்பதற்கு முன்பாக தண்ணீர் அருந்துவதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க முடியும் என மருத்துவர்கள் நம்புகின்றனர். தண்ணீர் அருந்துவதால் உடலில் உள்ள செரிமான சக்தி அதிகமாகிறது. காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது சில நோய் தொற்றுகளை நீக்க கூட உதவும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: சாப்பிடும் போது ஒரு சொட்டு கூட தண்ணீர் குடிக்க மாட்டீர்களா? இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
காலையில் பல் தேய்ப்பதற்கு முன்பே தண்ணீர் அருந்தினால், நோய் எதிர்ப்பு மண்டலம் கூட வலுவாகும் என சொல்லப்படுகிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் சருமம் பளபளப்பாக மாறும் என சொல்லப்படுகிறது. எல்லோரும் பல் துலக்காமல் காலையில் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சிலர் உடல் பருமன், மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் காலையில் பல் துலக்கும் முன் மிதமான சூடுள்ள வெந்நீரை அருந்துவதால் பலன்கள் பல கிடைக்கும். இது வாய் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும்.
பல் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பதால் நமது வாயில் காணப்படும் பாக்டீரியாக்களை தடுக்கவும், பற்களில் பாக்டீரியாக்கள் குவிவதை தடுக்கவும் முடியும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக பற்சொத்தை வராமல் காக்கவும் இந்த பழக்கம் உதவுகிறது.
சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும் அதனால் பொது இடங்களில் பேசவே கூச்சப்படுவார்கள் இது மாதிரியான வாய் துர்நாற்ற பிரச்சனை உள்ளவர்கள் பால் சுகாதாரத்தை மேம்படுத்த நாள்தோறும் பல் துலக்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீரை குடிப்பது நல்லது இதனால் அவர்களுடைய வாய் துர்நாற்றம் விரைவில் நீங்கும்.
சிலருக்கு வாயில் உமிழ்நீர் சுரப்பு இல்லாமையால் வாய் வறட்சியாக காணப்படும். வாய் வறட்சியாகவே இருப்பதால் ஹலிடோசிஸ் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்த உடனே பல் துலக்காமல் ஒரு டம்ளர் சூடுநீரை குடித்தால், வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.
நம்முடைய சில பழக்கவழக்கங்கள்தான் நம்மை நீண்ட நாட்கள் மருத்துவரின் நாடாமல் ஆரோக்கியமாக வைத்திருக்கும். காலை எழுந்ததும் பல் துலக்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு பின் பல் துலக்மலாம். அதன் பிறகு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்யலாம். இந்த பழக்கங்கள் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.
உங்களுக்கு பல் துலக்காமல் தண்ணீர் குடிக்க தயக்கமாக இருந்தால் ஆயில் புல்லிங் செய்து விட்டு தண்ணீர் அருந்தலாம். ஆயுள் புல்லிங் செய்வதால் பல் கூச்சம் நீங்கும். வாயில் உள்ள கெட்ட பாக்டீரியா நீங்கி வாய் துர்நாற்றம் குறையும். பற்களின் ஆரோக்கியம் மேம்படும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து வாய்க்குள் விட்டு எல்லா பற்கள் மீதும் பரவும் வகையில் சுழற்றி கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால் அதனை உடனடியாக துப்ப கூடாது. 10 முதல் 15 நிமிடங்கள் வாய்க்குள்ளேயே எல்லாப்புறங்களும் பரவுமாறு சுழற்றிவிட்டு பின்னர் தண்ணீரில் வாயை கழுவலாம். இப்படி செய்த பின்னர் தண்ணீரை குடித்தாலும் பலன்கள் கிடைக்கும் ஆயில் புல்லிங் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.