
சங்கு இயற்கையில் நமக்கு கிடைக்கும் அற்புத பொருள். கடலை தன்னுள் கொண்டிருக்கும் சின்ன குடுவை. ஏனென்றால் அதனை காதில் வைப்பதால் கடலோசையை கேட்க முடியும் என்பார்கள். இதனை வெறும் அழகு பொருளாக பார்க்காமல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொருளாகவும் காணலாம். சங்கு ஊதுவதால் அளவில்லா நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
இந்து மதத்தில் சங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்து புராணங்களில் பகவான் விஷ்ணுவின் அடையாள சின்னமாக சங்கு கருதப்படுகிறது. அது மட்டுமின்றி புத்த மதத்தில் காணப்படும் எட்டு புனித சின்னங்களில் சங்கிற்கும் ஒரு இடம் உண்டு. இதற்கு பல அடையாளங்களும் நன்மைகளும் இருந்தாலும் தற்போது பெரும்பாலானோர் இதை பயன்படுத்துவதை குறைத்துள்ளனர். ஏதேனும் பூஜைகளில், இறை வழிபாடுகளில் ஆரத்தி காட்டும் சமயத்தில் மட்டும் சங்கு பயன்படுத்துகின்றனர். சங்கு இல்லாமல் எந்த பூஜையும் முழுமை பெறாது என்பது நம்பிக்கை.
பகவான் கிருஷ்ணருடனும் சங்கு தொடர்பு உடையதாக சொல்லப்படுகிறது. சங்கிலிருந்து வெளியேறும் ஒலி நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களை அளித்து நேர்மறை ஆற்றல்களை உருவாக்க வல்லது. சங்கினை வெறும் கடவுளின் சின்னமாக மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொண்டால் நாம் பல வழிகளில் பயன் பெற முடியும். தினமும் சில நிமிடங்கள் சங்கு ஊதுவதால் உடலில் பல அற்புத மாற்றங்கள் நிகழும். அது என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: வீட்டு தலைவாசலில் சங்கு பதித்தால் இத்தனை சிறப்பு பலன்களை பெறலாமா? இது தெரியாம வீடு கட்டாதீங்க!!
சங்கு ஊதுவதால் ஏற்படும் நன்மைகள்:
சங்கு ஊதுதல் உங்களுடைய சிறுநீர் பாதையை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும். சிறுநீர்ப்பை, அடிவயிறு, உதரவிதானம், மார்பு, கழுத்து போன்ற தசைகள் நன்கு இயங்க சங்கு ஊதுதல் நல்ல பயிற்சி.
சங்கு ஊதுவதால் மலக்குடல் தசைகள் வலுவாகும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது உண்மை நீங்கள் தினமும் சங்கு ஊதுவதால் மலக்குடல் தசைகள் சிறந்த உடற்பயிற்சிக்கு உட்படுகிறது. இதனால் அவை வலுப்படுகின்றன பல்வேறு காரணங்களால் மலக்குடல் வலுவிழப்பதை இது தடுக்கிறது.
சங்கு ஊதுபவர்களின் புரோஸ்டேட் பகுதியில் நன்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் புரோஸ்டேட் விரிவாக்கம் தடுக்கப்படுகிறது. புரோஸ்டேட் ஆரோக்கியம் மேம்பட தினமும் சங்கு ஊதலாம்.
சங்கு ஊதும் போது, வாயை குவித்து ஊதுவோம். அப்போது நுரையீரல் தசைகள் விரிவடைந்து நன்கு செயல்படும். இதனால் காற்றோட்டத் திறனை நன்கு இருக்கும்.
ஆளுமை ஹார்மோனான தைராய்டு சுரப்பிகள் நன்கு செயல்பட சங்கு ஊதுவதை தொடர்ந்து செய்யலாம்
குரல் வளைகளை வலுப்படுத்த சங்கு ஊதுதல் சிறந்த பயிற்சி என்றால் மிகையாகா. தெளிவான கனீர் பேச்சு உங்களுக்கு வசப்படும்.
சங்கினை ஊதும் போது நம்முடைய தசைகள் நன்கு இயங்குகின்றன. காற்றினை லாபகமாக வெளியிடுவது உங்களுடைய முகத்தசைகளின் இயக்கத்திற்கு உதவுகிறது. ஆகவே தான் நாள்தோறும் சங்கு ஊதுபவர்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் இன்றி காணப்படுகிறார்கள்.
சங்கு ஊதுபவர்கள் எச்சரிக்கை:
சங்கு ஊதும் போது எப்போதும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அலட்சியமாக சங்கு ஊதுவதால் உங்களுடைய உறுப்புகள் சேதமடைய வாய்ப்புள்ளது. காது, கண் ஆகிய உறுப்புகளின் தசைகளை பாதிக்க வாய்ப்புள்ளது. காதில் உள்ள உதரவிதானத்தை (டயஃப்ராம்) பாதிப்படையும். ஆகவே நீங்களாக சங்கு ஊத முயற்சிக்காமல், ஏற்கனவே அந்த கலையில் வல்லவராக இருக்கும் ஒருவரிடம் ஊத கற்றுக் கொள்ளுங்கள்.
சிலரால் மூக்கு வழியாக சுவாசிக்க முடியாது. இதற்கு சளி பிரச்சனை, நுரையீரல் பலவீனம் உள்ளிட்ட சுவாச பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் மூக்கு வழியாக சுவாசிக்காமல் வாய் வழியாக சுவாசிப்பது சரியான அணுகுமுறை அல்ல. இப்படி வாய் வழியாக சுவாசிக்கும் காற்று வயிற்றுப் பகுதிக்கு செல்ல நேர்கிறது. வாய் வழியாக மூச்சு விடுவதை கவனித்து தவிர்க்க வேண்டும். குறிப்பாக சங்கு ஊதுபவர்கள் மூக்கு வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கிறீர்களா என்பதை கவனிப்பது அவசியம்.
சங்கு ஊதும் போது உறுப்புகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக சிலர் சங்கு ஊதுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், குடலிறக்கம் இருப்பவர்கள், கண் அழுத்த நோய் உள்ளவர்கள் சங்கு ஊதக் கூடாது.
இதையும் படிங்க: சங்குப் பூ தேநீர் குடிச்சிப் பாருங்க: ஆரோக்கிய நன்மைகளை அனுபவியுங்க!