
ஒரு நாளில் 10,000 காலடிகள் நடப்பதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது பலரும் அறிந்தது. குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடந்தாலும் அது சிறந்த பயிற்சியாக இருக்கும். 10 ஆயிரம் காலடிகள் எப்படி உடலுக்கு நன்மையை அளிக்கின்றனவோ அதைப் போலவே இரட்டிப்பான நன்மையை பெற 20,000 காலடிகள் நடப்பது உதவுவதாக ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளில் 20 ஆயிரம் காலடிகள் நடப்பது அவர்களுடைய எடை இழப்பு பயணத்தை துரிதப்படுத்துகிறது. விரைவில் உடல் எடையும் கணிசமாக குறைய உதவுகிறது. அது மட்டுமின்றி நல்ல தூக்கம் ஏற்பட 20,000 காலடிகள் நடைபயிற்சி மேற்கொள்வது உதவியாக உள்ளது. நீங்கள் ஒரே நாளில் 20 ஆயிரம் காலடிகளை நடக்க இலக்கு நிர்ணயிக்க தேவையில்லை.
ஆரம்பகட்டத்தில் 2 முதல் 3 ஆயிரம் காலடிகள் நடந்து 10 ஆயிரம் காலடிகள் இலக்கை அடையலாம். பின்னர் படிப்படியாக 20 ஆயிரம் காலடிகள் நடக்க முயற்சி செய்யலாம். இப்படி நடைபயிற்சி செய்வது கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். இதய ஆரோக்கியம் மேம்படவும் உதவும். நீங்கள் ஏன் 20 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை இங்கு காணலாம்.
இதையும் படிங்க: வாக்கிங் போறவங்க பண்ற '5' தவறுகள் இதுதான்.. சரியா செஞ்சா தான் 'நிறைய' நன்மை இருக்கு!!
மூளை ஆரோக்கியம்:
கடந்த 2019இல் ஜமா (JAMA) என்ற நரம்பியல் இதழில் வெளியான ஆய்வில், ஒரு நாளில் 8 ஆயிரத்து 900 காலடிகள் நடந்தவர்களுக்கு மூளை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்து குறைவாக உள்ளதாகத் தெரிவிக்கிறது. 3 முதல் 5 ஆயிரம் காலடிகள் நடப்பவர்களுக்கு நன்மைகள் இல்லை என சொல்ல முடியாது. அவர்களும் பயன்பெறுகிறார்கள். ஆனால் அதிகளவில் நடப்பவர்களுக்கு நன்மைகள் அதிகளவில் கிடைக்கின்றன.
இதய ஆரோக்கியம்:
ஐரோப்பிய இதழான ப்ரிவென்டிவ் கார்டியாலஜியில் இதயம் மற்றும் நடைபயிற்சி தொடர்பான ஆய்வு வெளியானது. அதில், ஒரு நாளில் குறைந்தபட்சம் 3 ஆயிரத்து 967 காலடிகள் நடப்பவர்களுக்கு இறப்புக்கான அபாயம் குறைவதாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு நாளில் குறைந்தது 2 ஆயிரத்து 337 காலடிகள் நடந்தாலும் இதய நோய் காரணமாக உயிரிழக்கும் அபாயம் குறைவதாக கூறுகிறது.
இதையும் படிங்க: பவர் வாக் பற்றி தெரியுமா? உடல் எடையை குறைக்க இந்த 'வாக்கிங்' முறை தான் சிறந்தது!!
குறுநடை:
ராயல் சொசைட்டியின் பி- இதழில் (Proceedings of the Royal Society B Journal) வெளியான ஆய்வில் நீண்ட தூர நடைபயிற்சிகளை விட குறுநடை அதிக பயன் அளிப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது மைக்ரோவாக் செய்யும் போது 60% வரைக்கும் உங்களுடைய ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம், நீண்ட தூரம் நடப்பதை காட்டிலும் காலை, மாலை, மதியம் என நேரத்தை பிரித்து குறுநடை செல்வது ஆற்றலை அதிகரிக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.
இது தவிர பல ஆய்வுகள் ஒரு நாளில் 20 ஆயிரம் காலடிகள் நடந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக சொல்கின்றன. அதை அடுத்ததாக காணலாம்.
மன ஆரோக்கியம்:
உளவியலின்படி, ஒரு நாளில் நீங்கள் 20 ஆயிரம் காலடிகள் நடைபயிற்சி மேற்கொண்டால் உங்களுடைய ஆரோக்கியத்தில் பயங்கரமான மாற்றங்கள் தெரியவரும். 20,000 காலடிகள் உங்களுடைய உடல் செயல்பாட்டை மட்டுமல்லாமல், மனநிலையையும் மாற்றுகிறது. மனச்சோர்வு, பதற்றம் போன்றவை உள்ளவர்களுக்கு இது நல்ல பலன்களை அளிப்பதாக உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
மூட்டுகள் வலிமை:
நாள்தோறும் உங்களுடைய உடல் தீவிரமாக இயங்கி வருவதால், உடலில் உள்ள பாகங்கள் வலுப்பெறுகின்றன. நீங்கள் 20 ஆயிரம் காலடிகளை வாரம் ஒருமுறை நடக்கத் தொடங்கினால் கூட மூட்டுகள் வலிமையாவதை உணர்வீர்கள். மூட்டு பிரச்சனைகளில் ஒன்றான ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க வாய்ப்புள்ளது. நடைபயிற்சி உங்களுடைய தசை, மூட்டுகளை வலுவாக்க உதவும்.
எடை குறைப்பு:
நடைபயிற்சி பொதுவாக கலோரிகளை எரிக்க உதவும் பயிற்சியாகும். ஒரு நாளைக்கு 20 காலடிகள் நடந்தால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். இதனால் எடை இழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் எடை இழப்பு ஒவ்வொருவரின் உடலையும் பொறுத்து மாறுபடும். ஒருவரின் எடை, நடக்கும் வேகம், நடைபயிற்சி செய்யும் நிலப்பரப்பைப் பொறுத்து எடை இழப்பு மாறுபடலாம். பொதுவாக 20 ஆயிரம் காலடிகள் நடந்தால் 500 முதல் 1,000 கலோரிகளை எரிக்க வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோய் கட்டுப்பாடு:
தினமும் நடைபயிற்சி செய்வதால் இன்சுலின் உணர்திறன் மேம்பாடு அடைகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் காலடிகள் நடந்தால் வகை 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் குறைகிறது. ஒவ்வொரு நாளும் உணவுக்குப் பின் ஒரு குறுநடை போடுவது குளுக்கோஸ் அளவுகளை சீராக வைக்க உதவும்.
20 ஆயிரம் காலடிகள் அற்புதம்!
நீங்கள் 20 ஆயிரம் காலடிகளை நடப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். எடை கட்டுக்குள் வரும். மன அழுத்தம் குறையும். இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, இரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தால் குறையும் வாய்ப்புள்ளது. பக்கவாதம், கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் வராது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம்;
ஒரு நாளில் பத்தாயிரம் கால அடிகள் என்பது ஒருவரால் எட்டக்கூடிய இலக்கு. ஆனால் 20 ஆயிரம் காலடிகள் சற்று அசாத்தியமானது தான். ஒரே நாளில் 20 ஆயிரம் காலடிகளை நடப்பதால் மிகவும் சோர்வாக உணரக் கூடும். ஆகவே உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதும் முக்கியமானதாகும். பொருத்தமான காலணிகளை அணிவது கட்டாயம். இல்லையென்றால் எலும்புகள் பாதிக்கலாம். கால்களில் வலி, காயம் உண்டாகலாம்.
இந்த பிரச்சனை இருந்தால்...
ஏற்கனவே உடலில் நாள்பட்ட வலி, மூட்டுகளில் பிரச்சனை, இதய நோய், கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் படிப்படியாக நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். ஒரே நாளில் 10 ஆயிரம், 20 ஆயிரம் காலடிகளை எட்ட வேண்டும் என முயற்சி செய்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.