
அயோடின் என்பது உடலுக்கு தேவையான ஒரு நுண் ஊட்டச்சத்து ஆகும். இது தைராய்டு ஹார்மோன்கள் சீராக செயல்பட அவசியமாகிறது. மக்களிடையே அயோடின் குறைபாட்டை போக்க இந்திய அரசு உப்புக்கு அயோடின் சேர்ப்பதை கட்டாயமாக்கி உள்ளது. அயோடின் குறைபாடுகளால் உலக அளவில் பல சுகாதார பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது கைடர். கைடர் என்பது தைராய்டு சுரப்பி வீக்கம் அடைந்து கழுத்தில் ஒரு கட்டி போல ஏற்படும் நிலையாகும். இது அயோடின் குறைபாட்டின் பொதுவான அறிகுறியாகும். கர்ப்பிணி பெண்களுக்கு அயோடின் குறைபாடு ஏற்படும்பொழுது கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். இது குழந்தைகளுக்கு நிரந்தர மனவளர்ச்சி குறைபாடு மற்றும் பெருமூளை சிதைவை ஏற்படுத்தலாம்.
அயோடின் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகளில் கற்றல் திறன் குறைவாக இருக்கும். கவனம் செலுத்துவதில் சிரமம், ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளின் உடல் வளர்ச்சி தாமதமாகலாம். தைராய்டு ஹார்மோன்கள் உடலின் ஆற்றல் உற்பத்திக்கு உதவுவதால் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படலாம். அயோடின் குறைபாட்டால் ஏற்படும் தைராய்டு ஹார்மோன் குறைபாடு உடல் எடையை அதிகரிக்கும். பெண்களுக்கு அயோடின் குறைவாக இருந்தால் கருத்தரித்தலில் சிக்கல் ஏற்படலாம். அயோடின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. அயோடின் குறைபாடு உள்ளவர்களுக்கு எளிதில் நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகம்.
தற்போது அயோடின் குறைவான உப்புகளை தேர்ந்தெடுக்குமாறு தவறான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் அயோடின் உப்பை தவிர்ப்பது அல்லது அதற்கு மாற்று தேடுவது மிகவும் ஆபத்தானதாகும். நம் உடலால் அயோடினை உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பை உண்பது அயோடின் குறைபாட்டை தடுப்பதற்கான முக்கிய வழியாகும். அயோடின் குறைபாடு குறிப்பிட்ட நபரை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எடுத்துக்காட்டாக கர்ப்பிணி பெண்கள் அயோடின் குறைபாடாக பாதிக்கப்பட்டால் அது வயிற்றில் வளரும் குழந்தைகளையும் கடுமையாக பாதிக்கும்.
சில நிபுணர்கள் அயோடின் குறைபாட்டை தடுப்பது தடுப்பூசி போடுவதைப் போன்ற முக்கிய சுகாதார நடவடிக்கை என்று குறிப்பிடுகின்றனர். உப்பில் மட்டுமல்லாமல் சில உணவுகள் மூலமாகவும் அயோடின் கிடைக்கிறது. டுனா போன்ற மீன்கள், இறால், கடல் பாசி ஆகியவற்றில் அயோடின் நிறைந்துள்ளது. பால், தயிர், சீஸ் போன்ற உணவுகளில் ஓரளவு அயோடின் உள்ளது. முட்டையிலும் குறைந்த அளவு அயோடின் உள்ளது. இந்த உணவுகளை தினசரி தேவையான அளவில் உட்கொள்வது போதுமான அயோடினை உடலுக்கு வழங்கும். ஆனால் தினமும் அனைவராலும் இந்த உணவுகளை உட்கொள்ள முடியாது என்பதால் அரசு அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
அயோடின் உப்பு என்பது அயோடின் குறைபாட்டை தடுப்பதற்கான ஒரு எளிய, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும். அயோடின் உட்புக்கு மாற்று தேடுவது, அதை தவிர்ப்பது, கடுமையான உடல்நலக் குறைவை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காக அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.