
அனைத்து பழங்களைக் காட்டிலும் வாழைப்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. வாழைப்பழத் தோலில் நார்ச்சத்து, ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் குறிப்பாக பி6 மற்றும் பி12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் வாழைப்பழங்கள் சாப்பிடுவது ஆற்றலை அதிகரிக்கவும், உடலின் அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்யவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிறதோ, அதே அளவு வாழைப்பழத் தோலிலும் இருக்கிறது. வாழைப்பழத் தோலில் பல மருத்துவ மற்றும் அழகு சாதனப் பண்புகள் உள்ளன.
வாழைப்பழத் தோலின் பண்புகள் குறித்து அறியாதால் அதை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இனிமேல் தூக்கி எறியாதீர்கள். வாழைப்பழ தோல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றுகின்றன. வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து காயவைத்து பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வர முகம் பொலிவு பெறும். வயதான தோற்றத்தை தடுக்கும். புதிய செல்களை புதுப்பிக்க உதவும். இதனால் இளமையான தோற்றத்துடன் விளங்க முடியும். முகத்தில் இருக்கும் முகப்பரு, தழும்புகள், வடுக்கள், சுருக்கங்கள், கோடுகள் குறையும்.
வாழைப்பழத் தோலை கண்களுக்கு கீழ் தடவுவது கருவளையத்தை குறைக்க உதவுகிறது. வாழைப்பழத் தோலை கண்கள் மற்றும் சருமத்தின் மேல் முகமூடியாக பயன்படுத்துவது சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. வறண்ட சருமப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கச் செல்வதற்கு முன்னர் வாழைப்பழத் தோலை முகத்தில் தடவி விட்டு படுக்கச் செல்ல வேண்டும். அதை அப்படியே காய விட்டு மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை கழுவி விட வேண்டும். இதை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருப்பதை உங்களால் பார்க்க முடியும். அதே போல் உதடு வெடிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரசாயனங்கள் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை விடுத்து வாழைப்பழ தோலை உதடுகளில் தடவலாம். இதன் காரணமாக உதடு வெடிப்பு, உதட்டில் தோல் உரிவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
வாழைப்பழ தோல்கள் சில பூச்சிக்கடி, தடிப்புகள் அல்லது காயங்களுக்கும் பயன்படுத்தலாம். இதை வெளிப்புறமாக பயன்படுத்தும் பொழுது அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்க உதவுகிறது. வாழைப்பழத் தோலை பற்களில் தேய்த்து வருவதன் மூலம் கறைகள் குறைந்து பற்கள் இயற்கையாகவே வெண்மையாகும். தோலில் உள்ள நார்களை வழித்து எடுத்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு கிராம்பு சேர்த்து நன்றாக இடித்து அந்த கலவையை கொண்டு பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறும். வாழைப்பழத்தின் தோல்கள் சரும பராமரிப்புக்கு மட்டுமில்லாமல் உரமாகவும் பயன்படுகிறது. தோல்களை சேகரித்து நாம் செடிகள் அல்லது மரங்களுக்கு அடியில் போட்டு விட்டால் அது சிறந்த உரமாகவும் மாறுகிறது. செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் இது அளிக்கிறது.
வாழைப்பழ தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போல அருந்தி வரலாம். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கவும், குடல் இயக்கத்தை சீராக்கவும், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. தற்போது வாழைப்பழங்கள் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படுவதால் அதை சுத்தமான நீரில் நன்கு கழுவுவது அவசியம். பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லது மற்ற ரசாயனங்கள் தோலில் படித்திருக்கலாம். எனவே நன்றாக சுத்தப்படுத்தியப் பின்னர் உபயோகிக்க வேண்டியது அவசியம். இந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அடிப்படையான தகவல்களை கொண்டு எடுக்கப்பட்டவை மட்டுமே. எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.