
2019 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு வைரஸ் தான் கொரோனா. வைரஸ் பரவிய சில ஆண்டுகளில் கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிந்தனர். இப்படி ஒரு ஆபத்தான வைரஸை இந்த உலகம் இதுவரை கண்டதில்லை. அரசு எடுத்த நடவடிக்கைகள், தடுப்பூசி, மக்களின் சுய கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது. இருப்பினும் அதன் திரிபுகள் அவ்வப்போது பூதாகரமாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் சில தூக்க கோளாறுகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய காலத்தில் பலருக்கும் தூக்கமின்மை பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு பலர் ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டர் (Sleeping Disorder), பிரைன் ஃபாக் (Brain Fog) ஸ்லீப்பிங் டிஸ்ரப்ஷன் (Sleeping Disruption) போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால், நரம்பு மண்டலங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு தூக்க சுழற்சி பாதிக்கப்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பது தூக்க கோளாறுகளுக்கு காரணமாக அமைகிறது. கொரோனா தொற்று குறித்த பதற்றம், தனிமைப்படுத்துதல், நோயின் விளைவுகள் ஆகியவை குறித்த கவலையும் பலருக்கும் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து தூக்கத்தை பாதித்துள்ளது.
கொரோனாவுக்குப் பிறகு உடலில் ஏற்படும் சோர்வு, வலி, சுவாசப் பிரச்சனைகள் ஆகியவை தூக்கமின்மைக்கு வழி வகுத்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் தூக்கத்தின் தரம் குறைந்துள்ளது. தூங்குவதற்கு சிரமம், தூங்கிய பின் மீண்டும் விழிப்பது, காலையில் மிகவும் சோர்வாக உணர்வது, பகல் நேரத்தில் தூக்கம் வருவது, பதட்டம் அல்லது மன அழுத்தம் ஆகியவை இந்த தூக்கமின்மை பிரச்சனைகளின் அறிகுறிகள் ஆகும். இந்த நிலையில் சமீப காலமாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரைன் ஃபாக் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இது ஒரு நோயல்ல இது கோவிட்க்குப் பிறகான ஒரு பொதுவான அறிகுறியாகும்.
அன்றாட விஷயங்களை மறந்து விடுவது, புதிய தகவல்களை நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம், முன்பு போல் விரைவாகவும் தெளிவாகவும் சிந்திக்க முடியாமல் போவது, வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவது, பேசும்பொழுது அல்லது எழுதும் பொழுது சரியான வார்த்தைகளை தேர்வு செய்ய முடியாமல் திணறுவது, எளிமையான முடிவுகளை எடுப்பதில் குழப்பம், மனரீதியாக சோர்வடைவது, சிறிய பணிகளை முடிக்க அதிக முயற்சி தேவைப்படுவது, முன்பு செய்த எளிதான வேலைகளை கூட ஒரு செய்ய முடியாமல் போவது, தொடர்ச்சியான அல்லது அவ்வப்போது ஏற்படும் தலைவலி, எளிதில் எரிச்சல் அடைவது, பதட்டம் அடைவது, சோகமடைவது ஆகியவை பிரைன் ஃபாக் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறிகுறிகள் ஆகும்.
கொரோனா வைரஸ் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்திய நேரடி அல்லது மறைமுக பாதிப்பே இதற்கு காரணம் ஆகும். நோய்த் தொற்றுக்குப் பிறகு உடலில் தொடர்ச்சியான அலர்ஜி ஏற்படுவது மூளையின் செயல்பாட்டை பாதிக்கலாம். வைரஸ் மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களை சேதப்படுத்தி இருக்கலாம் அல்லது மூளை செல்களின் செயல்பாட்டை பாதித்திருக்கலாம். தூக்கக் கோளாறுகள் மற்றும் பிரைன் ஃபாக் பிரச்சனை இருப்பவர்களுக்கு குறிப்பிட்ட மருந்து அல்லது சிகிச்சை என்று எதுவும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனையை வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நம்மால் மாற்ற முடியும். ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்தரிக்க பழகுவது, தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு செல்போன், லேப்டாப், எலக்ட்ரானிக் சாதனங்களை அணைத்து விடுவது ஆகியவை தூக்கத்தை வரவழைப்பதற்கான முக்கிய உத்திகள் ஆகும்.
அமைதியான, குளிர்ச்சியான, படுக்கையறையை உருவாக்கி படுத்து உறங்க பழகிக் கொள்ள வேண்டும். பகல் தூக்கம் சிலருக்கு இரவு நேர தூக்கத்தை கெடுக்கும் என்பதால் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். படுக்கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தூக்கம் வரவில்லை என்றால் படுக்கையை விட்டு எழுந்து அமைதியான வேலையை செய்ய வேண்டும். சத்தான சீரான உணவுகளை உண்ண வேண்டும். எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை உண்பது, இரவு 10 மணிக்கு முன்பாக படுக்கைக்குச் செல்வது, உடற்பயிற்சி, தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை செய்வது, தினமும் அரை மணி நேரமாவது நடப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, ஓய்வு நேரங்களை திட்டமிட்டு அந்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவது போன்றவை இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர உதவும்.
இந்த அறிகுறிகள் கடுமையாக இருக்கும் பட்சத்தில் மருத்துவர் அல்லது நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும். அவர்கள் உங்களின் உடல் நிலையை மதிப்பிட்டு அதற்கு தேவையான சிகிச்சைகளை பரிந்துரைப்பார்கள். மருந்துகள், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, மறுவாழ்வு சிகிச்சைகள் கூட சிலருக்கு தேவைப்படலாம். தூக்கமின்மையால் தவிப்பவர்களுக்கு குடும்பத்தினர் நண்பர்கள் ஆதரவு கண்டிப்பாகத் தேவை. சரியான சிகிச்சை மற்றும் ஆதரவு இருப்பின் இந்த பிரச்சனையை எளிதில் சரி செய்து விட முடியும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.