இன்றைய கால இளைஞர்கள் பலருக்கும் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை. எளிய படிகளைப் பின்பற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சரும பராமரிப்பில் மூன்று முக்கிய படிநிலைகள் உள்ளன. சுத்தப்படுத்துதல் (Cleansing), ஈரப்பதம் ஆக்குதல் (Moisturizing) மற்றும் பாதுகாத்தல் (Protecting). ஒரு ஆரோக்கியமான சருமத்திற்கு இந்த மூன்றும் அடிப்படையாகும். சுத்தப்படுத்துதல் சரும பராமரிப்பின் முதல் படி. நம் சருமத்தில் தூசி, வியர்வை, மாசு ஆகியவை படியும். இவை துளைகளை அடைத்து முகப்பரு மற்றும் மந்தமான சருமத்திற்கு வழிவகுக்கும். எனவே காலையிலும் இரவு படுக்கச் செல்லும் முன்னரும் உங்கள் முகத்தை ஒரு மைல்டான கிளென்சரைக் கொண்டு கழுவ வேண்டும். உங்கள் சரும வகைகளுக்கு ஏற்ற கிளென்சரை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு நுரை வரும் கிளென்சரும், வறண்ட சருமத்திற்கு கிரீம் கிளென்சரும் பயன்படுத்தலாம்.
25
சுத்தப்படுத்துதல் (Cleansing)
கிளென்சிங் செய்வதில் சோப்பு கட்டிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்கி வறண்ட தாக்கி விடும். அதேபோல் வெந்நீரில் முகத்தை கழுவுவதையும் தவிர்க்க வேண்டும். முகம் நன்றாக காய்ந்த பின்னர் சீரம் பயன்படுத்தலாம். மாய்சரைசிங் செய்வதற்கு முன்பாக சீரம் பயன்படுத்துவது சருமத்தை மீண்டும் ஈரப்பதமாக்குவதற்கு உதவும். சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு ஈரப்பதம் கொடுக்க வேண்டியது மிக அவசியம். இது சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்கவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். மேலும் சருமத்தின் பாதுகாப்பு தடையையும் (Skin Barrier) வலுப்படுத்த இது உதவுகிறது.
35
ஈரப்பதம் ஆக்குதல் (Moisturizing)
சீரம் தடவிய உடனேயே மாய்சரைசர் தடவ வேண்டும். இது ஈரப்பதத்தை சருமத்திற்குள் வைத்து பூட்டிவிடும். சருமத்திற்கு ஏற்ற வகையிலான மாய்ஸரைசரை தேர்ந்தெடுக்க வேண்டும். எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஜெல் அடிப்படையிலான மாய்ஸரைசரும், வறண்ட சருமத்திற்கு கிரீம் அடிப்படையிலான மாய்ஸ்ரைசர்களும் ஏற்றவை. மாய்ஸ்ரைசர்கள் மிகவும் முக்கியமானதாகும். இதை தவிர்த்தல் கூடாது. குறிப்பாக குளிர்காலம் அல்லது வறண்ட காலங்களில் மாய்ஸ்ரைசர் தடவுவது மிக அவசியமான ஒன்று. இதற்கு அடுத்த செயல்முறை சருமத்தை பாதுகாப்பதாகும். சூரிய ஒளி மற்றும் கணினி ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் ஒளிகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம். இது முன்கூட்டியே வயதான தோற்றம் கருமையான திட்டுக்கள் மற்றும் சரும புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே வெயிலில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். மழைக்காலம் அல்லது குளிர்காலத்திலும் பயன்படுத்தலாம். ஏனெனில் புற ஊதாக் கதிர்கள் மேகங்கள் வழியாகவும் வெளிப்படும். சன் ஸ்கிரீனை தவிர்ப்பது அல்லது குறைவான SPF கொண்ட சன் ஸ்கீரினை பயன்படுத்துவது சருமத்திற்கு ஆபத்தை விளைவிக்கலாம். இந்த ஸ்கின் கேர்-ஐ தினமும் பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவு பெறுவதோடு வயதான தோற்றம் வராமலும் தடுக்க முடியும்.
55
சருமத்தை பாதுகாக்கும் பிற வழிகள்
இது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து வழங்க வேண்டியது அவசியம். போதுமான நீர்ச்சத்து சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். எனவே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நல்ல தூக்கம் சரும செல்கள் புத்துயிர் பெற உதவும். மன அழுத்தம் சரும பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம். உங்கள் சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் உங்களுடைய சருமத்தின் வகையை கண்டறிந்து கொள்ள வேண்டியது அவசியம். எண்ணெய்(Oily), வறண்ட(Dry), சாதாரண (Normal), கலவை(Combination) அல்லது உணர்திறன் (Sensitive) கொண்ட சருமமா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் தயாரிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு குழப்பம் இருந்தால் தோல் நோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையுடன் தயாரிப்புகளை தேர்வு செய்யலாம்.