கரிசலாங்கண்ணி இலை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதைக் கொண்டு செய்யப்படும் கரிசாலை தைலம் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. கரிசலாங்கண்ணியை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொன்னாங்கண்ணி, கயாந்தரை, கரிசாலை போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு மூலிகை செடிதான் கரிசலாங்கண்ணி. இது ஈரப்பதமான இடங்களிலும், வயல் வரப்புகள் மற்றும் ஆற்றங்கரைகளில் செழித்து வளரும். இதில் வெள்ளை மற்றும் மஞ்சள் பூக்களை கொண்ட இரண்டு வகைகள் உள்ளது. ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் சீன பாரம்பரிய மருத்துவ முறைகளில் இது பயன்படுகிறது. இதன் பூ, தண்டு, வேர், இலைகள் என அனைத்துப் பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவை. கரிசலாங்கண்ணி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
26
முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியான, கருமையான முடியைப் பெற உதவுகிறது. இளநரையை போக்கி முடியை கருமை அடையச் செய்கிறது. மயிர்க் கால்களை வலுப்படுத்தி முடி அடர்த்தியாக வளர துவங்குகிறது. கரிசலாங்கண்ணி தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்து வர உடல் குளிர்ச்சி அடையும். இது பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால் பொடுகை கட்டுப்படுத்தவும் உதவும். கரிசலாங்கண்ணி மஞ்சள் காமாலை சிகிச்சையில் முக்கிய பங்காற்றுகிறது. கல்லீரல் செல்களை பாதுகாத்து, பித்தநீர் சுரப்பை சீராக்க உதவுகிறது.
36
கரிசலாங்கண்ணி தைலம் தயாரிப்பது எப்படி?
இளநரை முடி, உதிர்வு முடி, முடி அடர்த்தி குறைவது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி எண்ணெயில் தைலம் செய்து பயன்படுத்தி வரலாம். இது ஆயுர்வேதத்தில் பிரிங்கராஜ் கூறப்படுகிறது. கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மூன்று கைப்பிடி அளவு நன்கு புதியதாக பறிக்கப்பட்ட கரிசலாங்கண்ணி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். கரிசலாங்கண்ணி இலைகளை எடுத்து மண், பூச்சி, புழுக்கள் இல்லாமல் தண்ணீரில் சுத்தம் செய்து நன்கு அலச வேண்டும்.
பின்னர் இந்த இலைகளை வெயிலில் சுமார் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நன்றாக காய வைக்க வேண்டும். ஈரம் நன்றாக உலர்ந்து, இலைகள் நன்றாக காய்ந்திருக்க வேண்டும். செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் காய்ந்த கரிசலாங்கண்ணி இலைகளை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விட வேண்டும். எண்ணெய் பச்சை நிறமாக மாறும் வரை சுமார் பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம். அடுப்பை அதிக தீயில் வைத்தல் கூடாது. 10 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும். பின்னர் காற்று புகாத அல்லது சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி வைத்துக் கொள்ளலாம். இந்த பிருங்கராஜ் தைலம் கூந்தலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
56
பிருங்கராஜ் தைலத்தால் ஏற்படும் நன்மைகள்
இதில் இருக்கும் இயற்கையான கருமை நிறம் இளநரை வருவதை தடுத்து முடியை கருமையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த இலையை சிலர் கண் மை தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து இந்த தைலத்தை பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நின்று புதிய முடி வளரத் துவங்கும். தலைமுடி அடர்த்தியாக வளரும். மண்டை ஓட்டின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் மயிர்க் கால்கள் வலுப்பெற்று, முடி உதிர்வு குறைந்து போகும். உடல் உஷ்ணம் காரணமாக முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். இந்த தைலத்தை பயன்படுத்தும் பொழுது உடல் உஷ்ணமும் குறையும். கண்கள் குளிர்ச்சி அடையும். பார்வை தெளிவாகும். முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்புகளும் தடுக்கப்படும்.
66
கரிசலாங்கண்ணி தைலத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?
கரிசலாங்கண்ணி எண்ணெயை கொண்டு மசாஜ் செய்து வந்தால் மன அழுத்தம் குறையும். மன அழுத்தம் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டால் அதை குறைக்கும் தன்மை இந்த தைலத்துக்கு உண்டு. தினமும் காலையில் சிறிதளவு இந்த தைலத்தை எடுத்து தலைமுடி மற்றும் ஸ்கேல்பில் படும்படி கைவிரல்களால் நன்றாக மசாஜ் செய்யவும். தினமும் எண்ணெய் வைக்க முடியாதவர்கள் வாரம் ஒரு முறையாவது இந்த தைலத்தை தேய்த்து ஊற வைத்து மசாஜ் செய்து பின்னர் குளிக்கலாம். இந்த எண்ணெய் பயன்படுத்துபவர்கள் அதிக ரசாயனங்கள் கொண்ட ஷாம்புகள் பயன்படுத்துவதை தவிர்த்து சீயக்காய் பயன்படுத்துவது முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.