
அன்றாட உடற்பயிற்சி செய்வது நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நம்முடைய சரியான உணவு பழக்கம், வாழ்க்கை முறை எந்த அளவுக்கு ஆரோக்கியமான உடலுக்கு தேவையோ அதே அளவுக்கு அன்றாட உடற்பயிற்சிகளும் அவசியமாகிறது. தினமும் நடைபயிற்சி செய்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது பலரும் அறிந்தது.
ஆனால் ஒரே இடத்தில் நின்றபடி ஓடுவது (Spot jogging) அதே அளவுக்கு இதயத்தை பராமரிக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை. ஸ்பாட் ஜாக்கிங் உங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரும் பங்கு வகிக்கிறது. நீங்கள் 45 நிமிடம் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்களை 10 நிமிடம் ஸ்பாட் ஜாக்கிங் செய்வதும் தரவல்லது. இதை குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஸ்பாட் ஜாகிங்:
ஸ்பாட் ஜாகிங் பயிற்சியை நீங்கள் 10 நிமிடம் செய்வதால் சுமார் 100 முதல் 150 கலோரிகளை எரிக்க முடியும். இது ஒருவரின் உடல், அவர் ஜாகிங் செய்யும் வேகம் ஆகிவற்றை பொறுத்தது. பிஸியான உங்களுடைய வேலை சூழலில் குறைந்தபட்சம் 10 நிமிடம் நீங்கள் ஸ்பாட் ஜாக்கிங் செய்வதால் உடல் இயக்கம் நன்றாக இருக்கும். கூடவே இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். ஜாகிங் செய்யும்போது இதயத் துடிப்பு வேகமாக உயரும். ஆக்ஸிஜன் தேவையும் அதிகமாகும். ஜாகிங் செய்வதால் உடலில் பல பாகங்கள் இயங்கத் தொடங்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் 10 நிமிடங்களுக்கு மேலாகவும் ஜாகிங் செய்யலாம்.
இதையும் படிங்க: ஈஸியா '1' கிலோ எடை குறைக்கலாம்.. ஆனா அதுக்கு 'எத்தனை' காலடிகள் நடக்கனும் தெரியுமா?
நடைபயிற்சி:
வேகமாக நடந்தால் 45 நிமிடத்தில் ஒருவர் 200 முதல் 300 கலோரிகளை எரிக்க முடியும். ஆனால் அது அவரின் எடையையும், நடக்கும் வேகத்தையும் பொறுத்தது. நடைபயிற்சி நல்ல கார்டியோ பயிற்சியாகும். ஸ்பாட் ஜாகிங் செய்வதில் உள்ள சிக்கல் மூட்டுகள் ஆரோக்கியமாக இல்லாதவர்கள் அதை செய்யக் கூடாது. ஆனால் நடைபயிற்சியை எல்லா தரப்பினரும் செய்யலாம்.
வாக்கிங் செய்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது. கெட்ட கொழுப்பு எரிக்கப்படுகிறது. வாக்கிங் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் பயிற்சியாகும். ஆனாலும் ஸ்பாட் ஜாகிங் மாதிரி விரைவான பலன்களை நடைபயிற்சி தராது. குறைந்த கலோரிகளை எரிக்க வாக்கிங் அதிக நேரம் எடுக்கக்கூடியது. தினமும் நடைபயிற்சி செய்வதால் அதற்கு உடல் பழகிவிடும். அதனால் வேகம், கால அளவை மாற்றி நடையின் தீவிரத்தை அதிகரிக்கவில்லை எனில் நல்ல பலன்களை பெற முடியாது.
வாக்கிங் vs ஸ்பாட் ஜாகிங் எது சிறந்தது?
ஸ்பாட் ஜாகிங், வாக்கிங் இரண்டுமே தனித்தனி நன்மைகளை கொண்டவை. இரண்டு உடற்பயிற்சிகளுமே இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் ஆனால் ஸ்பாட் ஜாகிங் செய்யும் போது இதயத் துடிப்பு விரைவில் அதிகரிக்கும். இதயம், நுரையீரல் இரண்டிற்குமே ஸ்பாட் ஜாகிங் நல்ல பயிற்சியாக இருக்கும். இதை விட நடைபயிற்சி சற்று வீரியம் குறைந்த பயிற்சியாகும். ஆனால் இதய செயல்பாட்டில் நல்ல பலன்களை தரும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் நடைபயிற்சி செய்வதே சிறந்தது.
பலவீனமான மூட்டுகளை கொண்டோர் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. நடைபயிற்சி செய்யும் போது மூட்டுகளில் பாதிப்பு ஏற்படாது. நடைபயிற்சியினால் காயங்கள் ஏற்படும் அபாயமும் குறைவாக இருக்கும். மூட்டு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்த நபர்கள் நடைபயிற்சி செய்வது நல்லது. ஆனால் ஸ்பாட் ஜாக்கிங் தீவிரமான உடற்பயிற்சி என்பதால் மூட்டுகளில் சிரமத்தை ஏற்படுத்தலாம். ஸ்பாட் ஜாக்கிங் செய்யும் போது சரியான ஷூவை அணிந்து பயிற்சி செய்வது காயங்களை தவிர்க்க உதவலாம்.
இரண்டு பயிற்சிகளுமே மனநலனை மேம்படுத்தக் கூடியவை. ஸ்பாட் ஜாகிங் செய்வதால் மகிழ்சியை ஏற்படுத்தக் கூடிய எண்டோர்பின்களின் சுரப்பு தூண்டப்படுகிறது. இதனால் அழுத்தம் குறையும். அதைப் போலவே நடைபயிற்சி செய்வதால் மனச்சோர்வு நீங்கும். இயற்கையை ரசித்தப்படி நடைபயிற்சி செய்வது புத்துணர்வை அளிக்கும். நடைபயிற்சியின்போது இதம் சீராக துடிக்கும்; இதனால் பதட்டம் தணியும். வேகமாக நடைபயிற்சி செய்வதால் உடல் நன்கு இயங்கி கலோரிகளை எரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: ஒரு நாளைக்கு 10 நிமிடம் ஓடினால் போதுமாம்.. இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்..