ஐபிஎல் 2020: பேசுறது ஒண்ணு; செய்றது ஒண்ணு..! இப்படி இருந்தால் டீம் எப்படி விளங்கும் மிஸ்டர் கோலி..?

First Published | Sep 30, 2020, 5:31 PM IST

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகள் வழங்குவதில்லை என்ற விமர்சனத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேயிருக்கிறார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, இதுவரை செய்துவந்த தவறைத்தான் மீண்டும் செய்கிறது.
ஆர்சிபியின் கோர் டீமும், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் வலுவில்லாமல் இருப்பதுதான் அந்த அணி இதுவரை ஐபிஎல்லில் கோப்பையை வெல்லமுடியாமல் திணறியதற்கு காரணம்.
Tap to resize

மேலும் ஆர்சிபி அணியில் பொதுவாகவே வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. திடீரென அணியில் எடுப்பதும் நீக்குவதுமாக இருந்தாலே, நல்ல வீரரால் கூட சரியாக ஆடமுடியாது. திறமையான வீரர் என்று நம்பி எடுத்தால், அவர் சொதப்பினாலும் கூட, அவருக்கான ரோலை தெளிவுபடுத்தி தொடர் வாய்ப்புகள் அளித்தால் தான் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும்.
ஆனால் ஆர்சிபி கேப்டன் கோலி அதை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் நீண்ட காலமாகவே உள்ளது. குறிப்பாக கம்பீர் இதை அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும் கோலி அதையே தான் தொடர்ந்து செய்துவருகிறார்.
இந்த சீசனில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜோஷ் ஃபிலிப்பை ஆர்சிபி ஏலத்தில் எடுத்தது. சன்ரைசர்ஸூக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் இரண்டே பந்துகள் மட்டுமே அவருக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு ரன் அடித்து நாட் அவுட். பஞ்சாப்புக்கு எதிரான 2வது போட்டியில், ஃபிலிப்பை 3ம் வரிசையில் இறக்கிவிட்டது ஆர்சிபி அணி. அது கோலியின் பேட்டிங் ஆர்டர். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான கோலியின் வரிசையில் அவர் இறக்கிவிடப்பட்டார். ஆனால் டக் அவுட்டாகி வெளியேறினார். அந்த போட்டியில் ஆர்சிபி 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
அந்த போட்டிக்கு பின்னர் ஃபிலிப்பை 3ம் வரிசையில் இறக்கியது குறித்து பேசிய கேப்டன் கோலி, ஜோஷ் ஃபிலிப் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியிலும்(ஆஸி., உள்நாட்டு போட்டிகளில்) பிக்பேஷ் லீக்கிலும் டாப் ஆர்டரில் இறங்கி அருமையாக ஆடியிருக்கிறார். இது சீசனின் தொடக்கம் தான் என்பதால், அவரது முழு திறமையை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக முன்வைசையில் இறக்கிவிட்டு, மிடில் ஆர்டரில் வலுசேர்க்கும் விதமாக நாங்கள்(கோலி, ஏபிடி) இறங்கலாம் என்று நினைத்தோம் என்று கோலி தெரிவித்திருந்தார்.
ஃபிலிப்பின் திறமை மீது அபார நம்பிக்கை வைத்திருப்பதை போலவே பேசிய கோலி, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஃபிலிப்பை நீக்கிவிட்டார். ஃபிலிப் மீது நம்பிக்கை வைத்தால், அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்க வேண்டுமே தவிர, நீக்குவதும் எடுப்பதுமாக இருக்கக்கூடாது. பேலன்ஸான ஆடும் லெவனை உறுதி செய்யாமல், தொடர்ந்து மாற்றங்களை செய்வதிலிருந்து கோலி இன்னும் மாறவேயில்லை.

Latest Videos

click me!