ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பொதுவாக புள்ளி பட்டியலில் பின் தங்கியே இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கி புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் இருக்கின்றன.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டுமே இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் கேகேஆரை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அண்டர் 19 இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வால், அண்டர் 19 உலக கோப்பையில் அருமையாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இளம் வயதிலேயே பெரும் கஷ்டங்களை கடந்து, சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்த சீசனுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.2.40 கோடிக்கு எடுத்தது. அதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. சிஎஸ்கேவிற்கு எதிரான முதல் போட்டியில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் வெறும் ஆறு ரன்களில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப்புக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பட்லர் வந்துவிட்டதால், ஸ்மித்தும் பட்லரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். அதனால் ஜெய்ஸ்வால் கழட்டிவிடப்பட்டார். ஸ்மித் ஓபனிங்கில் சிறப்பாக ஆடுவதால், அவர் தொடர்ந்து அதே வரிசையில் இறங்குவார் என்பதி சந்தேகமில்லை. பட்லரும் தொடக்க வீரராகத்தான் இறங்குவார். 3ம் வரிசையில் சஞ்சு சாம்சன் செமயாக செட் ஆகிவிட்டார். எனவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேனானா ஜெய்ஸ்வாலுக்கு இன்றைய போட்டியிலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது.