வர்ணனை பணி என்பது கிரிக்கெட் உலகில் மதிப்புமிக்க இடத்தில் இருக்கும்போது ஆர்ஜே. பாலாஜி என்பவர் அதனுடைய தரத்தைக் குறைத்துவிட்டார் என பலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்ஐ.பி.எல் என்றாலே என்டர்டெயின்மென்ட் தான். இந்த வருடம் கொரோனா வைரஸின் காரணமாக ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் ரசிகர்களே இல்லாமல் ஐ.பி.எல் நடத்தப்பட்டு வருகிறது. .
ஐ.பி.எல் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் தமிழ் வர்ணனையுடன் ஒளிபரப்பப்படுகின்றன. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகவே கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழ் வர்ணனையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கி வருகிறது. ஆங்கில வர்ணனையில் இருப்பது போன்ற தரம், தமிழ் வர்ணனையில் இருப்பதில்லை என்பது ஆரம்பம் முதலே கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து வரும் விமர்சனம். இதைப் பற்றி நிறைய மீம்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இவற்றைத் தாண்டி, தமிழ் வர்ணனைக்கு எதிரான புதியதொரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அது, நிறவெறி.
வர்ணனையில் இருந்த ஆர்.ஜே பாலாஜி, பொல்லார்டை பற்றிப் பேசும்போது, `எந்தக் கடையில அரிசி வாங்குறாருனு தெரியலியே', `பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்தா மூக்கு மட்டும்தான் தெரியும்', `எங்க வீட்டுக்கெல்லாம் அவரை சாப்பிடக் கூப்பிட மாட்டேன்', `மலை மாதிரி இருக்காரு' என்றெல்லாம் பேசியது பெரும் எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பெற்று வருகிறது.
இவை நிச்சயமாக உருவ கேலி மற்றும் பொல்லார்ட் சார்ந்து இருக்கும் நிறம் மீதான கேலிதான். கறுப்பின கிரிக்கெட் வீரர்கள் மீது மட்டும் குறிப்பாகச் செய்யப்படும் தனித்த உடல் சார்ந்த கேலிகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான அர்னால்டு ரஸ்ஸல், ஐ.பி.எல் தமிழ் வர்ணனையில் இணைகிறார். அவரிடம், அவர் பேசும் ஈழத்தமிழைப் பேசுவதுபோல் கேலி செய்வதையும் ஆர்.ஜே பாலாஜி பலமுறை செய்திருக்கிறார். அர்னால்டு ரஸ்ஸல் இதை எப்படி எடுத்துக்கொண்டாலும், ஒன்றிரண்டு முறைக்கு மேல் அந்தக் கேலி ரசிகர்களுக்குக் கேட்பதற்கு மிக சங்கடமாகவே இருக்கிறது
இந்திய ஒன்றியத்தில் பேசப்படும் மொழிகளில் செய்யப்படும் கிரிக்கெட் வர்ணனைகளில், ஆணாதிக்க, நிறவெறி வக்கிரங்களும் சேர்ந்தே பகிரப்படுகின்றன. இதற்குக் காரணம் இந்த வர்ணனைகளை செய்பவர்கள், தங்களுக்குள் தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் நிறவெறி, ஆணாதிக்க கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள்.