ஐபிஎல் 13வது சீசனின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஆர்சிபியும் மோதின. இந்த போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ஆர்சிபி அணிக்கு பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி மரண அடி.
துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, கேஎல் ராகுலின் அதிரடியான சதத்தால்(132 நாட் அவுட்) 20 ஓவரில் 206 ரன்களை குவித்து 207 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்தது.
ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ், ஃபின்ச் என அனுபவம் வாய்ந்த பெரும் அதிரடி படையே இருந்தும் கூட, அந்த அணி வெறும் 109 ரன்கள் அடித்து 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியில் ராகுல் ஒருவர் அடித்த ஸ்கோரைவிட, ஆர்சிபி ஒட்டுமொத்த அணியே 23 ரன்கள் குறைவாக அடித்து படுமோசமாக தோற்றது.
இந்த போட்டி விராட் கோலிக்கு அனைத்துவிதத்திலும் மறக்கவேண்டிய போட்டி. ஏனெனில் அரிதினும் அரிதான சம்பவமாக கேஎல் ராகுலுக்கு 2 எளிய கேட்ச்களை கோட்டைவிட்டார் கோலி. அதன்பின்னர் 9 பந்தில் 42 ரன்களை விளாசினார் ராகுல். அந்த ரன்கள் தான் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பேட்டிங்கிலும் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணிக்கு பந்துவீச அதிக நேரமும் எடுத்துக்கொண்டுள்ளார். ஆர்சிபி அணி ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது, ஐபிஎல் போட்டி விதிமுறைகளின் படி தவறு என்பதால், ஆர்சிபி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பேட்டிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்து விதத்திலும் கோலிக்கு மரண அடியாக விழுந்தது இந்த போட்டி.