ஐபிஎல் 13வது சீசனில் துபாயில் இன்று நடக்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 57 ரன்கள் அடித்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த 26 ரன்கள் அடித்த சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த பூரான், மேக்ஸ்வெல் என யாருமே சரியாக ஆடவில்லை. ஆனால் ஒருமுனையில் மற்றவர்கள் சொதப்பினாலும் மறுமுனையில் கேஎல் ராகுல் களத்தில் நன்றாக செட்டில் ஆகி, தனக்கே உரிய பாணியில், ஸ்டைலிஷாகவும், அதேவேளையில் மிகத்தெளிவாகவும் பெரிய ஷாட்டுகளை ஆடி சதமடித்தார்.
கடைசி 2 ஓவர்களில் காட்டடி அடித்தார் கேஎல் ராகுல். ஸ்டெய்ன் வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசிய ராகுல், அந்த ஓவரில் மட்டுமே 26 ரன்களை குவித்தார். துபே வீசிய கடைசி ஓவரில் கருண் நாயர் ஒரு பவுண்டரியும், ராகுல் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியும் விளாச, 20 ஓவரில் பஞ்சாப் அணி 206 ரன்களை குவித்து 207 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
17 மற்றும் 18 ஆகிய 2 ஓவர்களின் கடைசி பந்திலும் கேஎல் ராகுலின் 2 கேட்ச் வாய்ப்புகளையும் விராட் கோலி தவறவிட்டார். கோலி அரிதினும் அரிதாகத்தான் கேட்ச்களை தவறவிடுவார். இன்று ராகுலுக்கு மட்டுமே 2 கேட்ச்களை தவறவிட்டார். அதை பயன்படுத்தி கடைசி 2 ஓவரில் பொளந்துகட்டினார் ராகுல். ராகுல் 69 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 132 ரன்களை குவித்து, கடைசி வரை களத்தில் இருந்தார் ராகுல்.