6 வருஷம் கழித்து அடி வாங்குன இடத்துல வச்சே கேகேஆரை பழிதீர்த்த மும்பை இந்தியன்ஸ்..! தரமான சம்பவம்

First Published | Sep 24, 2020, 2:02 PM IST

2014ல் அபுதாபியில் கேகேஆரிடம் வாங்கிய மரண அடிக்கு 6 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்துள்ளது மும்பை இந்தியன்ஸ். 
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று அபுதாபியில் நடந்த போட்டியில் கேகேஆர் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவின் க்ளாஸான பேட்டிங்கால் 195 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, 54 பந்தில் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 80 ரன்களை குவித்தார். சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடி 47 ரன்களை விளாசினார். இவர்களின் அதிரடியால் 195 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ், 196 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.
Tap to resize

சுனில் நரைன், ஷுப்மன் கில் நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், இயன் மோர்கன் என பெரும் அதிரடி படையே இருந்தும் கூட, அந்த அணி தொடக்கம் முதல் இறுதி வரை எந்த சூழலிலுமே பெரிய இலக்கை விரட்டுகிறோம் என்ற நினைப்பில் வெற்றி முனைப்பில் ஆடவேயில்லை. எந்த சூழலிலும் மும்பை இந்தியன்ஸ் மீது ஆதிக்கம் செலுத்தவேயில்லை.
சிஎஸ்கேவிற்கு எதிரான முதல் போட்டியில் சற்று அசந்த பும்ரா, இந்த போட்டியில் அருமையாக பந்துவீசி மிரட்டினார். அதிரடி மன்னர்களான ரசல் மற்றும் மோர்கன் ஆகிய 2 அபாயகரமான வீரர்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தி மிரட்டினார். பும்ரா, போல்ட், பாட்டின்சனின் அபார பவுலிங்கால் 20 ஓவரில் வெறும் 146 ரன்கள் மட்டுமே அடித்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது கேகேஆர் அணி.
அபுதாபியில் 6 ஆண்டுகளுக்கு முன் கேகேஆரிடம் வாங்கிய மரண அடிக்கு, பதிலடி கொடுத்து பழிதீர்த்துள்ளது மும்பை இந்தியன்ஸ். 2014 ஐபிஎல் சீசனில் அபுதாபியில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, ஜாக் காலிஸ் மற்றும் மனீஷ் பாண்டேவின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 163 ரன்கள் அடித்து 164 ரன்களை மும்பை இந்தியன்ஸுக்கு இலக்காக நிர்ணயித்தது.
ஆனால் வெறும் 122 ரன்களுக்கு சுருண்ட மும்பை இந்தியன்ஸ், 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. அடி வாங்கிய அதே அபுதாபியில் 6 ஆண்டுகள் கழித்து அதை விட 8 ரன்கள் அதிக வித்தியாசத்தில்(49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி) கேகேஆரை வீழ்த்தி பழிதீர்த்துள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்.

Latest Videos

click me!