
இரத்த வகைக்கும், மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கும் இடையே தொடர்பு இருக்குமா? இந்த கேள்வியே புதிதாக இருக்கலாம். ஆனால் ரத்த வகை ஒருவருக்கு இளம் வயதில் மூளை பக்கவாதம் ஏற்பட காரணமாக அமையலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வினை மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி (UMSOM) ஆராய்ச்சியாளர்கள் முன்னின்று நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் நரம்பியல் இதழில் வெளியாகின. ஆராய்ச்சிகளின் முடிவுகளில், குறிப்பிட்ட ரத்த வகைகளை கொண்டிருப்பவர்களுக்கு 60 வயதிற்கு முன்பு ஏற்படும் பக்கவாதத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு இருதரப்பினரை ஒப்பிட்டு செய்யப்பட்டது. இதில் முன்பு செய்யப்பட்ட 48 ஆய்வுகளின் தரவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் பக்கவாதம் பாதிக்காத 6 லட்சம் பேரும், இஸ்கிமிக் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரம் பேரும் பங்கேற்றனர்.
மூளைக்கு இரத்த கொண்டு செல்லப்படுவது தடைபடுவதால் ஏற்படும் பக்கவாதமே 'இஸ்மிக் பக்கவாதம்' ஆகும். இந்த நோய் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு தான் பெரும்பாலும் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் நோயாளிகளின் மரபணு தரவுகளை ஆய்வு செய்தது. குறிப்பிட்ட இரத்த வகை கொண்டிருப்பவர்களுக்கு தான் இந்த ஆரம்ப கால பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிற இரத்த வகையை கொண்டிருப்பவர்களுடன் ஒப்பீடு செய்யும் போது 'A' வகை இரத்தம் கொண்டிருப்பவர்களுக்கு ஆரம்பகால பக்கவாதம் ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாக இருந்துள்ளது. இன்னொரு தகவலும் இதில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. '0' வகை இரத்தப் பிரிவினருக்கு ஆரம்பகால பக்கவாதம் வரும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்துள்ளது. ஆரம்ப கால பக்கவாதம் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 16 சதவீதம் A- வகை இரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு இருந்துள்ளது. உறுதியாக இந்த இரத்த வகையைக் கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாதம் வரும் என சொல்ல முடியாவிட்டாலும் ஆபத்துக்கான வாய்ப்பு இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வுகளில் 0 - இரத்தப் பிரிவினருக்கு ஆரம்பகால பக்கவாதம் வரும் வாய்ப்பு 12% குறைவாக உள்ளது தெரியவந்தது.
இந்த ஆய்வுகள் A வகை இரத்தப் பிரிவினரை பயத்தில் அல்லது பதற்றத்தில் ஆழ்த்துவதற்கு அல்ல. அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு பரிந்துரை மட்டுமே. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பக்கவாத பாதிப்பு ஏற்பட காரணமானவைகளை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கிறீர்களா? ஆபத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள்.. ஜாக்கிரதை!
இதற்கான தெளிவான காரணங்கள் ஏதும் ஆய்வில் கண்டறியப்படவில்லை. ஆனால் மற்ற இரத்த பிரிவுகளைவிட இந்த வகை இரத்தத்தில் ரத்த உறைவுக்கான காரணிகள் கொஞ்சம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரத்தப்போக்கு ஏற்படும்போது அதை கட்டுக்குள் வைக்க இரத்த உறைவு அவசியம். இதுவே அடிக்கடி ஏற்படும்போது மூளைக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்புகள் ஏற்பட வழிவகுக்கும். இதனால் பக்கவாதம் ஏற்படலாம். ஒருவரின் இரத்த வகையைப் பொறுத்து இரத்த ஓட்டத்தில் உள்ள புரதங்கள் அல்லது இரத்த உறைதலுக்கு உதவியாக இருக்கும் இரத்தத்தட்டுகள் இரத்தக் கூறுகளின் பண்புகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த ஆய்வு முழுக்க சரியானது என்றும் சொல்லிவிட முடியாது. இதில் சில குறைபாடுகளும், வரம்புகளும் உள்ளன.
இதையும் படிங்க: புகைபிடித்தல், நீண்ட நேரம் வேலை செய்வதால் இந்த ஆபத்தான நோய் ஏற்படுகிறது: நிபுணர்கள் எச்சரிக்கை..
உதாரணமாக இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு பன்முகத்தன்மை அதிகம் கிடையாது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 35% பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்களில்லை. மற்ற இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆய்வின் முடிவுகளை பொருத்திப் பார்க்க முடியுமா என்பதும் உறுதியாக தெரியவில்லை. இந்த ஆய்வு முழுக்க ஆரம்ப கால பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பினை குறித்து மட்டுமே ஆராய்ந்தது. ஆனால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பக்கவாதங்களை ஆராய்ச்சி செய்த போது அதில் ரத்த வகைக்கும், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளுக்கும் பெரியளவில் தொடர்பு இல்லாதது தெரியவந்தது.