
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, உடல் பருமனை குறைக்க முதலில் கவனம் செலுத்த வேண்டியது உணவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது தான் ஆரோக்கியமான உணவுகளை உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பதிவில் எந்த மாதிரியான உணவுகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் என்பதை காணலாம்.
நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் மூன்று வேளைகளிலும் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதாவது அரிசி, கிழங்கு வகைகள் போன்ற கார்போஹைட்ரேட், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதச்சத்து உள்ள உணவுகள், நல்ல கொழுப்பு உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். உங்கள் எடைக்கு ஏற்ற அளவில் புரதச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வது நாள் முழுக்க உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தரும். தேவையில்லாத பசியை நீக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள், அதிக கொழுப்புகளை கொடுக்கக்கூடிய பொரித்த உணவுகளை குறைக்க வேண்டும். இவை உங்களுடைய எடையை அதிகரிப்பதில் பங்காற்றுகின்றன.
உங்கள் எடையை குறைப்பதில் நீங்கள் சாப்பிடும் முறையும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. பெரிய தட்டுகளில் சாப்பிடாமல் சிறிய தட்டுகள், கிண்ணங்களில் உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது அதிகமாக சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது. உணவு சாப்பிடும் போது மெதுவாக ஒவ்வொரு வாய் உணவை எடுத்து சாப்பிடும் போதும் ருசித்து சுவைத்து சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிடுவது உங்களுக்கு திருப்தி தரும்.
எடையை குறைக்க சூப்பரான வழி, சாப்பிடும் விதத்தை மாற்றுவதுதான். நீங்கள் காலையில் 8 முதல் 9 மணிக்கு உங்களுடைய காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள்ளாக உண்ண வேண்டும். மாலை நேர உணவை 07 மணிக்குள்ளாக சாப்பிட்டுவிட்டு முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எந்த உணவையும் தின்பண்டங்களையும் சாப்பிடக் கூடாது. மீண்டும் மறுநாள் காலை உணவை எடுத்துக் கொள்ளலாம். இப்படி சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்படும். எடை குறையவும் உதவியாக இருக்கும்.
உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்ல; உடலை ஆரோக்கியமாக பேணுவதற்கும் தினசரி உடற்பயிற்சிகள் அவசியமானது. நீங்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம். நடப்பது, மெதுவாக ஓடுவது (ஜாகிங்), வேகமாக ஓடுதல் (ரன்னிங்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் செய்யலாம். வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான பயிற்சிகள் அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான பயிற்ச்சிகள் செய்ய வேண்டும். வாரத்தில் 2 முறையாவது தசை வலிமை பயிற்சிகள் செய்ய வேண்டும்.
தண்ணீர் குடியுங்கள்
உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது அவசியம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்களுடைய பசியை கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கும்.
எடையை குறைக்க நினைப்பவர்கள் தரமான தூக்க சுழற்சியை பின்பற்றுவது அவசியம். நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். சரியான தூக்கம், பசியை கட்டுப்படுத்தும். ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. தொடர்ந்து தூக்கமின்றி இருக்கும் போது அதிகமான பசி ஏற்படும்.
சிறிய இலக்குகள்;
எடையை குறைக்க நினைத்ததுமே 10 முதல் 15 கிலோ உடல் எடையை உடனடியாக குறைக்க வேண்டும் என நினைப்பது தவறு. முதலில் ஒரு கிலோ பின்னர் 2 கிலோ என படிப்படியாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
மேலே சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றுவது விரைவில் உடல் எடையை குறைக்க உதவும். எந்த விஷயத்திலும் தொடர்ச்சியான முயற்சி மட்டுமே பலன் தரும். தொடர்ந்து எடை இழப்புக்காக நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே பயன் தரும்.