
தற்போதைய காலத்தில் யாருக்கு என்ன நோய் வருகிறது என்பதையே யாராலும் கணிக்க முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்று பலரும் ஆசை கொள்கின்றனர். ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவதற்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மூலிகைகள் உதவுகின்றன. இந்த மூலிகைகளை சாப்பிடுபவர்களுக்கு ஒட்டுமொத்த உடலும் பலம் பெற்று, ஆரோக்கியம் பெருகும். அதே வேளையில் வயிற்றுப் புண்கள், நாள்பட்ட குடல் புண்கள் சரியாகும். இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். உடலில் பித்தத்தின் அளவு சீராகும். தலைமுடி உதிராமல் தடுக்கும். இளநரை, வழுக்கை தலை ஆகிய அனைத்து பிரச்சினைகளையும் இந்த மூலிகைகள் சரி செய்யும்.
அதில் முதலிடம் பிடிப்பது திரிபலா சூரணம். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் விதைகளை நீக்கி நன்கு காய வைத்து பொடி செய்தால் திரிபலா சூரணம் தயாராகிவிடும். இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இது மூன்றுமே காயகல்ப மூலிகைகள். திரிபலாவை தொடர்ந்து எடுத்து வருபவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படாது. குடல் சுத்தமாகும். மலச்சிக்கல் தீரும். ஜீரணம் மேம்படும். வாய்வுத் தொல்லை ஆகிய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.
சமீப காலமாக கருங்காலி இணையத்தில் வைரலாகி வருகிறது. கருங்காலி மரத்துண்டுகளில் இருந்து செய்யப்படும் மாலையை கழுத்தில் அணிந்தால் பல நன்மைகளைப் பெறலாம் என்று ஆன்மீக தகவல்கள் கூறுகின்றன. கருங்காலி மாலை ஆன்மீக ரீதியாக மட்டுமல்ல, மருத்துவ குணங்களையும் கொண்டது. நோய்கள் பலவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது. குறிப்பாக இரத்த சர்க்கரை அளவை குறைப்பது, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது, உடன் பித்தத்தை குறைப்பது, உடல் சூட்டை குறைப்பது ஆகிய வேலைகளை செய்யும்.
வேங்கை மரம் கண்திருஷ்டி உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்கும். அந்த காலத்தில் நிலை வாசலில் கட்டி வைத்திருப்பார்கள். அதற்கு விஷங்களை முறிக்கும் தன்மையும் உண்டு. பூச்சிக்கடிகளுக்கும் மருந்தாக பயன்படும். இதன் வாசனைக்கு சிறு பூச்சிகள் கூட நெருங்காது. வேங்கை மரப்பாலில் மை பொட்டு செய்து குழந்தைகளுக்கு கண் மை வைப்பது வழக்கத்தில் இருந்தது. வேங்கை மரப்பட்டையை காய வைத்து பொடித்து பயன்படுத்தினால் தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடல் பிரச்சனைகள் வராது.
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று மூலிகைகளையும் இரண்டு கிராம் அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 350 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் இந்த பொடிகளை சேர்த்து கொதிக்க விட வேண்டும். 100 மில்லியாக வற்றிய பின்னர் வடிகட்டினால் கஷாயம் ரெடி. காலை ஒரு வேளை உணவுக்கு முன்பு, இரவு ஒரு வேளை உணவுக்கு முன்பு குடிக்க வேண்டும். அப்படியே குடிப்பது தான் நல்லது. அதிக கசப்பாக இருந்தால் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். இந்த மூன்று வகையான பொடிகளுமே நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும். இந்த பொடிகளை வாங்கி சம அளவில் எடுத்து, நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பயன்படுத்தி வரலாம்.
பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்துமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த தகவல் பிரபல ஆயுர்வேத மருத்துவர் கௌதமன் வெளியிட்ட வீடியோவை அடிப்படையாகக் கொண்டது. இதன் உண்மை தன்மை, செயல்திறனுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பாகாது. ஒவ்வொருவரின் உடல்நலம் மற்றும் அவர்களுக்கு இருக்கும் நோய்கள் ஆகியவை வேறுபடுவதால் எந்த ஒரு மருத்துவத்தையும் தொடங்குவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய மருத்துவம் செய்தல் கூடாது.