
தேன் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இனிப்புப் பொருளாகும். இதை அளவோடு சாப்பிடும் பொழுது உடலுக்கு பல நன்மைகளை தரும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். தேனை மிதமான அளவில் உட்கொள்ளும் பொழுது அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதால் நோய் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். செரிமான நொதிகளை கொண்டுள்ளதால் மலச்சிக்கல், வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும். கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டி நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
தேனில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், பிரக்டோஸ் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவும். தேன் இரத்தத்தை சுத்திகரிப்பதோடு இரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் தொண்டை அழற்சியிலிருந்து விடுபடவும், இருமலை குறைக்கவும் உதவும். மேலும் தூக்கமின்மை பிரச்சனையை குறைத்து, நல்ல உறக்கத்தை ஏற்படுத்தும். எலும்புகளை பலப்படுத்தவும், இரத்தசோகை குறைபாட்டை நீக்கவும் தேன் பயன்படுகிறது.
அதேசமயம் தேனை அதிகமாக உட்கொள்ளும் பொழுது எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். இதில் இயற்கையான சர்க்கரை இருந்தாலும் அதிக அளவில் சாப்பிடும் பொழுது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் தேன் எடுப்பதை அறவே கைவிட வேண்டும். சர்க்கரைக்கு மாற்றாக தேன் எடுப்பது கூடாது. ஏனெனில் சர்க்கரையை போலவே தேனும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் தன்மை கொண்டது. இதில் அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கும். தண்ணீர் அல்லது எலுமிச்சை சாறுடன் கலக்காமல் தனியாக தேனை அதிக அளவில் சாப்பிடும் பொழுது உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம். அதிகப்படியான தேன் உட்கொள்வது வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்று பிடிப்பு, பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். அதிக பிரக்டோஸ் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
தேன் ஒரு இனிப்பு சுவை மிகுந்த பொருள் என்பதால் இதை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு பற்களில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரிக்கலாம். இதன் காரணமாக பல் சொத்தை, பல் சிதைவு ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு தேன் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேன் சாப்பிட்ட பிறகு உடலில் அரிப்பு, தடிப்பு, இருமல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் தேனில் இருக்கும் போட்யூலிசம் பாக்டீரியா குழந்தைகளுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூனுக்கு மேல் தேன் உண்ணக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு தேக்கரண்டியில் சுமார் 64 கலோரிகள் இருக்கும். இதில் பெரும்பாலும் சர்க்கரை இருப்பதால் அளவோடு உட்கொள்ள வேண்டியது அவசியம்.
தற்போது தேன் என்கிற பெயரில் பலரும் கலப்படத் தேனையே விற்பனை செய்கின்றனர். இதில் பெரும்பாலும் சர்க்கரையை கலந்துள்ளது. எனவே நீரிழிவு மற்றும் பிற நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். சந்திகளில் கிடைக்கும் தேன் தூய்மையானதுதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். கலப்படம் செய்யப்பட்ட தேன்கள், சர்க்கரை கலந்திருக்கும் தேன்கள் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். எனவே தூய்மையான தேனை வாங்கி அளவோடு உட்கொள்ள வேண்டும். தேனை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து விட்டு பின் எடுப்பது நல்லது.