
நம் ஊரில் விளையும் திராட்சை முதல் தர்பூசணி வரை அனைத்து பழங்களுமே விதையுடன் இருப்பவை. ஒரு சில பழங்கள் மட்டுமே இயற்கையிலேயே விதை இல்லாமல் விளையும். ஆனால் தற்போது விதையில்லா பழங்கள் என்கிற பெயரில் சந்தைகளில் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடித்து துப்ப வேண்டிய அவசியம் இல்லை என்பதற்காக இதன் பின் விளைவுகள் குறித்து யோசிக்காமல் மக்களும் இதை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வகையான சீட்லெஸ் பழங்கள் இனிப்பு சுவைக்காக வணிக நோக்கில் கொண்டுவரப்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள் ஆகும். தற்போது சந்தைகளில் பப்பாளி, திராட்சை போன்ற சீட்லெஸ் பழங்கள் விற்கப்படுகின்றன.
ஆனால் விதையில்லா பழங்கள் இயற்கையின் சமச்சீர் நிலைமையை சீர்குலைக்கின்றன. ஒரு கனி எப்படி அமைய வேண்டும் என்பதை இயற்கையே தீர்மானிக்கிறது. ஆனால் இயற்கைக்கு மாற்றாக மனிதன் தன்னுடைய தேவைக்காக இந்த விஷயத்தை மாற்றி அமைக்கிறான். இதனால் சமச்சீரற்ற நிலை உருவாகி நோய்கள் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. கால நிலைக்கு ஏற்ப மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக பழங்களும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டன. உதாரணமாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழைப்பழத்தில் பெரிய அளவிலான விதைகள் இருந்தன, ஆனால் தற்போது கிடைக்கும் வாழைப்பழங்களில் கடுகு அளவிலான விதைகள் மட்டுமே இருக்கின்றன. காலத்திற்கு ஏற்ப தாவரங்களும் தன்னை இயல்பாகவே மாற்றிக் கொண்டு வருகின்றன. ஆனால் மனிதன் தன்னுடைய தேவைகளுக்காகவும், அவசரத்திற்காகவும் விதையை நீக்கம் செய்வது இயற்கைக்கு புறம்பானது.
குறிப்பாக பழங்களில் இருக்கும் விதைகளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பன்னீர் திராட்சையில் இருக்கும் விதைகள் ரிசவெட்டால் என்கிற வேதிப்பொருள் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வெளிநாட்டுச் சந்தைகளில் இந்த திராட்சைகள் கிலோ 1200 டாலருக்கு விற்கப்படுகின்றன. ஆனால் நம்முடைய ஊர்களில் பழக்கடைகளில் விதையுடன் கூடிய திராட்சை ஒரு அட்டைப் பெட்டியில் ஓரமாக வீசப்படுகிறது. பலரும் விதை இல்லாத திராட்சையே விரும்பி வாங்கிச் செல்கின்றனர். விதையே இல்லாத பழங்களை பயன்படுத்தத் துவங்கி விட்டால் இயற்கையான மகரந்தசேர்கை நடைபெறாமல் பிற்காலத்தில் விதைக்காக கார்ப்பரேட்டுகளிடம் கையேந்துகிற நிலைமை கூட ஏற்படலாம். எனவே விதை உள்ள பழங்களை விளைவிப்பதையும், வாங்குவதையும் அதிகப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
மேலும் விதை இல்லாமல் கிடைக்கும் வீரிய ரக விதைகளைக் கொண்டு விளைவிக்கப்படும் பழங்களில் ஆக்ஸின் என்கிற ரசாயனம் கலக்கப்படுகிறது. இந்த முறைக்கு ‘பார்த்தினோ கார்பிக்’ என்று பெயர். இதன் மூலமாக பழங்களில் விதை உருவாவது தடுக்கப்பட்டு, சதைப் பகுதி அதிகமாக விடும். இதனாலேயே பழங்கள் விதையில்லாமல் விளைகின்றன. இந்த பழங்கள் இனிப்பு சுவையை மட்டுமே கொண்டிருப்பதால் மக்களும் இதை விரும்பி வாங்குகின்றனர். ஜூஸ் கடைகளிலும் விதை இல்லாத பழங்களே அதிகம் வாங்கப்படுகின்றன. விதை உள்ள பழங்களில் ஜூஸ் போடும் பொழுது கசப்பு ஏற்படுவதால் பழக்கடைகளும் விலை இல்லாத பழங்களை வாங்கியே விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதில் தெளிக்கப்படும் ரசாயனங்கள் இந்த பழங்களை விரைவில் கெட்டுப் போக செய்யாது. மேலும் உடலுக்கு எந்த விதமான சத்துக்களையும் கொடுக்காது.
இதுகுறித்த மேலும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படும் நிலையிலும், சீட்லெஸ் பழங்கள் சில தொற்று நோய்களையும், புற்று நோய்களையும் உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள ரசாயனங்கள் காரணமாக சிலருக்கு உடலில் அலர்ஜியும் ஏற்படலாம். ஜீன்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு பழங்கள் விளைவிக்கப்படுவதால் அப்பழங்களை உண்பவர்களின் மரபணுக்களிலும் மாற்றம் நிகழலாம். மேலும் விதை இல்லா பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்ற ஊட்டச்சத்தும் குறைவாகவே காணப்படுகிறது. விதைகள் இன்றி இனப்பெருக்கம் செய்ய முடியாததால் மனிதர்களின் தலையீடு இல்லாமல் இயல்பாகவே இனப்பெருக்கம் செய்யும் தன்மையை இழக்கின்றன. இது முழுவதுமான மனித தலையீட்டைச் சார்ந்திருப்பதால் இயற்கைக்கு மாறான செயல்முறையாகவும் விளங்குகிறது.
மேலும் நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக இதில் அதிக அளவிலான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படலாம். இதன் காரணமாக இது இயற்கையான சத்துக்களை இழக்க நேரிடலாம். மேலும் சுவையும் சற்று மாறுபடலாம். விதையில்லா பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என்பது நேரடியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் இயற்கையான பழங்களை சேர்த்துக் கொள்வதே மனிதர்களுக்கு நன்மை தரும். கூடுமானவரை விதைகளுடன் கூடிய பழங்களை சாப்பிடக் கற்றுக் கொள்ளுங்கள்.