Published : Jul 15, 2025, 04:26 PM ISTUpdated : Jul 15, 2025, 04:28 PM IST
இந்தியாவின் பிரபலமான, பாரம்பரிய உணவுகளாக சொல்லப்படும் சமோசா மற்றும் ஜிலேபியை ஆரோக்கியமற்ற உணவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகள் சிகரெட்டிற்கு இணையான உணவுகள் என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில், உடல் பருமன் விகிதம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டில் சுமார் 50 கோடி இந்தியர்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல்வேறு தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். இதைக் கருத்தில் கொண்டு, அதிக சர்க்கரை, எண்ணெய் மற்றும் மாவுச்சத்துள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
சமோசா மற்றும் ஜிலேபி போன்ற உணவுகளில் அதிக கலோரிகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரை இருப்பதால், இவை உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களுக்கு நேரடியாக பங்களிக்கின்றன. இதன் காரணமாகவே, இந்த உணவுகளை சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேர்க்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
26
சமோசா மற்றும் ஜிலேபி மீது ஏன் கவனம்?
இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளில் சமோசாவும் ஜிலேபியும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இவை அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்டிருப்பதால், உடல் பருமன் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
சமோசா, மைதா மாவில் செய்யப்பட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுவதால், அதிக கலோரிகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் இவற்றில் அதிகம் உள்ளன.
ஜிலேபி, இனிப்புப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஜிலேபி, சர்க்கரை மற்றும் எண்ணெயின் கலவையால், ரத்த சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தும் தன்மை கொண்டது. இந்த இரண்டு உணவுகளும் மிதமாக உட்கொண்டால் பிரச்சனை இல்லை என்றாலும், அன்றாட வாழ்வில் வழக்கமான சிற்றுண்டியாக மாறும் போது, உடல்நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன.
36
சிகரெட் போன்று எச்சரிக்கை வாசகங்கள்:
இந்திய இருதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் இது குறித்து "சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவதைப் போலவே, சமோசா மற்றும் ஜிலேபி போன்ற நொறுக்குத் தீனிகளை அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளிலும் விரைவில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறும்" என்று தெரிவித்துள்ளார். இது நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், சமோசா மற்றும் ஜிலேபி போன்ற நொறுக்குத் தீனிகள் விற்கப்படும் இடங்களிலும், உணவுப் பொருட்களில் உள்ள எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளைப் பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்களும் விரைவில் இடம்பெற உள்ளன. இது தேவையில்லாத உணவுகளைத் தவிர்ப்பதற்கான புதிய முயற்சி என்றும் கூறப்படுகிறது.
56
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பங்கு:
இந்தியாவில் உணவுப் பொருட்கள் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பொருட்களின் கொள்முதல், உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம், விற்பனை, தரம் மற்றும் இறக்குமதி போன்றவற்றை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மேற்பார்வையிட்டு வருகிறது. ஹோட்டல்கள் முதல் டீ கடைகள் வரை, பெரிய பல்பொருள் அங்காடிகள் முதல் சிறிய பெட்டிக் கடைகள் வரை அனைவருக்கும் சோதனை நடத்த FSSAI-க்கு அதிகாரம் உள்ளது. இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதிலும், உணவுப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதிலும் FSSAI-யின் பங்கு மிக முக்கியமானது.
66
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு:
சமோசா, ஜிலேபி பிரியர்களுக்கு இந்த செய்தி கஷ்டமாகத் தோன்றினாலும், இது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இந்த உணவுகளுக்குத் தடை விதிக்கப்படாவிட்டாலும், அவற்றை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான உணவுப் பழக்கங்கள் அவசியம். நமது பாரம்பரிய உணவுகளான சமோசா மற்றும் ஜிலேபி போன்றவற்றை மிதமாக உட்கொண்டு, அதிக எண்ணெய், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.