
இட்லி, தோசை பொங்கல் ஆகிய அனைத்திற்கும் விதவிதமாக சட்னி செய்து சாப்பிடுவதையே விரும்புகிறோம். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி ஆகியவை நமக்கு மிகவும் பழக்கம். ஆனால் சமீபத்தில் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் போட்டியாளரான நந்தகுமார் நாவல் பழத்தை பயன்படுத்தி சட்னி செய்து அசத்தியிருந்தார். அதைப் பார்த்த நடுவர் ரங்கராஜ் தனது கேட்டரிங் சர்வீஸில் இனி நாவல்பழ சட்னியை அறிமுகப்படுத்த இருப்பதாக புகழ்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இந்த சட்னியை எப்படி செய்வது என்பது குறித்து இணையத்தில் பலரும் தேடத் துவங்கியுள்ளனர். இந்த சட்னி செய்முறை குறித்து தற்போது இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நாவல் பழங்களை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். மண், அழுக்கு இல்லாமல் கழுவி எடுத்த பின்னர் நடுவில் இருக்கும் விதைகளை நீக்க வேண்டும். விதைகளை கண்டிப்பாக நீக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இதில் உள்ள துவர்ப்பு சுவை சட்னியை கசப்பானதாக மாற்றி விடலாம். எனவே நாவல் விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸி ஜாரில் நாவல் பழங்கள், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் உப்பு சேர்த்து கலந்தால் சுவையான நாவல்பழ சட்னி ரெடி. இதன் புளிப்பு சுவையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். வெல்லத்திற்கு பதிலாக ஒரு ஸ்பூன் சர்க்கரையும், புளிக்கு பதிலாக எலுமிச்சை சாறு சாறும் பிழிந்து பயன்படுத்தலாம். இந்த சட்னி புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு என அனைத்தும் கலந்த ஒரு வித்தியாசமான சட்னியாக இருக்கும். இட்லி, தோசைக்கு மட்டுமில்லாமல் கலவை சாதனங்களான புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம் ஆகியவற்றிற்கும் இந்த சட்னி நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும். நாவல் பழம் உடலுக்கு சத்து என்பதால் இதை சட்னி வடிவில் கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். தேவைப்பட்டால் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளிக்கலாம்.
நாவல் பழம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கிறது. சட்னி அரைப்பதற்கு முன்னர் நீக்கப்பட்ட விதைகளை தூக்கி எறியாமல் அதை வெயிலில் நன்றாக காய வைத்து பொடி செய்து கொண்டு இரவு படுப்பதற்கு முன்னர் அரை ஸ்பூன் அல்லது வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். இதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான அமைப்பை சீராக்கி குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. நாவல் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
நாவல் பழம் சில குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு சீசன் பழமாகும். இது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இதை குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம். மேல் குறிப்பிட்ட தகவல்கள் இணையத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்டது மட்டுமே. நாவல் பழங்கள் சிலருக்கு உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே எந்த ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு முன்னரும் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா என்பதை பரிசோதித்து பின்னர் பயன்படுத்த வேண்டும். சந்தேகங்கள் இருப்பின் மருத்துவரை கலந்தாலோசித்து அதன் பின்னரே எடுக்க வேண்டும்.