உங்களுக்கு படர்தாமரை, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவை உங்களை மட்டுமின்றி உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. படர்தாமரை என்பது தோலில் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்றாகும். படர்தாமரை வந்தால் மீண்டும் சருமத்தின் மீது சொறிந்து கொள்ள தோன்றும். இதனால் தடிப்புகள் ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய கைவைத்தியத்தை இங்கு காணலாம்.
யாருக்கு ஏற்படும்?
அதிக எடை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்களுக்கு படர்தாமரை வரலாம். நாய், பூனை போன்றவை மூலம் மனிதர்களுக்கு வரலாம். மனிதர்களிடம் இருந்தும் மனிதர்களுக்கு பரவலாம். அதாவது ஏற்கெனவே படர்தாமரை பாதித்தவரிடம் இருந்து பிறருக்கு 1முதல் 3 வாரங்களில் பரவ வாய்ப்புள்ளது.
படர்தாமரைக்கு வேம்பு
வேப்ப மரத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இது சரும அரிப்புக்கு நல்மருந்தாக செயல்படும். வேப்பிலையை அரைத்து, அரிப்பு உள்ள இடங்களில் தடவுங்கள். இந்த இலைகளுக்கு பூஞ்சைகளை அழிக்கும் சக்தி உண்டு.
மஞ்சள்
மஞ்சள் சருமம் தொடர்பான பல நோய்களுக்கு மருந்தாக அழைக்கப்படுகிறது. ஒரு துண்டு மஞ்சளை தண்ணீரில் கலந்து அதை பேஸ்ட் போல செய்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி விடுங்கள். அது காய்ந்து போகும் வரை அப்படியே விடுங்கள். இப்படி சில நாள்கள் செய்தால் அரிப்பும் நீங்கும்.
சாமந்திப்பூ:
பொதுவாக சாமந்தி பூவை திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த பூவை வைத்து படர்தாமரை, சரும அரிப்பு ஆகியவற்றை நீக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பூவில் ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
ஆவாரம் பூ:
காசியா அங்கஸ்டிஃபோலியா என்றும் அழைக்கப்படும் ஆவாரம் பூச்செடியை வைத்து படர்தாமரையை கட்டுப்படுத்தலாம். இந்த செடியை அரைத்து, படர்தாமரை அரிப்பு உள்ள இடங்களில் தடவுவதன் மூலம் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: பேரழகை பெற முகத்தில் பாம்பு மசாஜ்... விசித்திரமான 7 அழகு சிகிச்சைகள்!!