தொப்பையை கரைக்கும்... மாதவிடாய் வலியை நீக்கும்... உஷ்த்ராசனம் எப்படி செய்யனும் தெரியுமா?

First Published | Jun 20, 2023, 12:40 PM IST

 International Day of Yoga 2023:  தொப்பையை எளிமையாக குறைக்கும் உஷ்த்ராசனத்தை எளிமையாக செய்வது குறித்து இங்கு காணலாம். இந்த ஆசனம் ஆஸ்துமாவையும் கட்டுக்குள் வைக்கும். 

உஷ்த்ராசனம் (ஒட்டக நிலை) பல நன்மைகளைக் கொண்ட ஆசனமாகும். உஷ்த்ரம் என்றால் சமஸ்கிருதத்தில் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் பார்ப்பதற்கு ஒட்டகம் போல் தெரிகிறது. உடலின் நடுப்பகுதியை பின்னோக்கி வளைப்பதன் மூலம் இதை செய்யலாம். தோள், மார்பு, இடுப்பை வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் உஷ்த்ராசனம் செய்ய வேண்டும். இதை செய்யும்போது நுரையீரல் நன்கு திறப்பதோடு, முதுகுத்தண்டில் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. இதை எப்படி செய்யவேண்டும் என்று காணலாம். 

Step1:

உஷ்த்ராசனம் செய்ய முதலில் முழங்காலில் நிற்கவும். உங்கள் தொடைகளை முற்றிலும் நேராக வைத்திருங்கள். இப்போது உங்கள் முழங்கால்களுக்கும் பாதங்களுக்கும் இடையில் சிறிது இடைவெளி விடுங்கள்.

Tap to resize

Step 2: 

முழங்காலில் இடைவெளி விட்டு வசதியான நிலைக்கு வந்த பின்னர், மெதுவாக பின்னால் சாய்ந்து கொள்ளுங்கள். முதலில் மெதுவாக ஒரு கையை பின்னோக்கி வளைக்க முயற்சிக்கவும். மெல்ல முயன்று குதிகாலைக் கையால் பிடித்து கொள்ளுங்கள். உடலைக் கஷ்டப்படுத்தி செய்யவேண்டாம்.

Step 3: 

அதே போல மற்றொரு கையையும் பின்னோக்கி கொண்டு சென்று மற்றொரு குதிகாலை பிடிக்கவும். இடுப்பை முன்னோக்கி தள்ள இங்கே முயற்சிக்கவும். தொடைகளில் ஒரு நல்ல நீட்சி உணர்வு இருக்கும்.

Step 4: 

இப்போது தலையும் முதுகையும் பின்னோக்கி சாய்க்கவும். முடிந்தவரை கீழே செல்லவும். இங்கே இப்போது நீங்கள் உங்கள் முழங்கைகளை உள்ளே இருந்து உருட்ட வேண்டும் மற்றும் அவற்றை வெளியே பார்த்தபடி திருப்ப வேண்டும். 

இதையும் படிங்க: மூட்டு வலியைப் போக்க உதவும் 6 யோகா ஆசனங்கள்..!

Step 5: 

இதுவே முழுமையான உஷ்த்ராசன நிலை. இப்போது முடிந்தவரை உடல் மற்றும் முதுகு தசைகளை தளர்த்த முயற்சி செய்யுங்கள். உடலின் ஒவ்வொரு நீட்சியையும் இங்கே உணருங்கள். 

உஷ்த்ராசனம் பலன்கள்:

தினமும் உஸ்த்ராசனம் செய்வது மிகவும் பலன் தரும். இதன் காரணமாக, தோள், மார்பு, இடுப்பு ஆகியவை வலுவடைகின்றன. உஷ்த்ராசனம் செய்வதன் மூலம் சோர்வு, பதட்டம் நீங்கும். இது நுரையீரலைத் திறக்கவும், மாதவிடாய் வலி நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. இது மட்டுமின்றி, இதைச் செய்வதில் உள்ள முழு முக்கியத்துவம் தொப்பையை கரைப்பதிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க: அச்சு அசலாக மோடியே யோகா செய்வது போன்ற வேற லெவல் அனிமேஷன்... பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்

Latest Videos

click me!