நம்முடைய வீட்டில் அம்மாக்கள் பருப்பு டப்பா, அரிசிக்குள்ளாக காசு ஒளித்து வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த காசு அவர்களின் சேமிப்பு. வீட்டு செலவு போக அவ்வப்போது மீதமாகும் பணத்தை அப்படி சேர்த்து வைப்பார்கள். வீட்டில் அவசர தேவை வரும்போது அதை எடுத்து செலவு செய்வார்கள். அப்படி, கணவருக்கு தெரியாமல் சிறிது பணத்தை சேமிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. எல்லார் வீட்டிலும் இந்த விஷயம் நடந்தாலும், ரகசியமாக பணம் சேர்த்து வைக்க ரகசியமாக வங்கி கணக்கை தொடங்குவது கூடுதல் நன்மை தரும். இது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட தேவை என்றே சொல்லலாம். பெண்களுக்கான சேமிப்பு பகுதி எப்போதும் வீட்டின் சமையலறையாகவே இருக்கவேண்டியதில்லையே.. அது வங்கியாகவும் இருக்கலாம்.