ஸ்கிப்பிங் செய்வது நமது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. தினமும் ஸ்கிப்பிங் செய்யும் நபரின் நிணநீர் மண்டலம் நன்கு பராமரிக்கப்படுகிறது. கணிசமான அளவில் எடை இழப்பு ஏற்படுவதோடு, தசைகளும் வலுப்பெறும். முழங்காலில் ஸ்டீல் வைத்திருந்தால் ஸ்கிப்பிங் செய்ய வேண்டாம். ஸ்கிப்பிங்கில் ஒரு தொடர்ச்சியும், நேர்த்தியும் இருக்க வேண்டும். சுவாசத்தை ஒரே சீராக வைத்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நபரும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப ஸ்கிப்பிங் செய்யும் கால அளவை நிர்ணயித்து கொள்ளலாம். இதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
தொப்பை குறைய எளிய வழி
ஸ்கிப்பிங் செய்பவரின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் வயிற்று தசைகள் இறுகி தொப்பை குறைகிறது. தசைகள் தீவிரமாக வேலை செய்வதால் உடலில் வெப்பம் உருவாகும். இதனால் நிறைய கலோரிகள் இழக்கப்படுகிறது.
மூளை ஆரோக்கியம்
ஸ்கிப்பிங் செய்யும் போது கவனம் குவிக்கப்படுகிறது. கயிறு முறையாக சுழற்றப்படும்போது, நாம் குதிக்க வேண்டும். இதற்கு கவனமாக இருப்பது முக்கியம். மூளையின் கூர்மையை இது அதிகப்படுத்துமாம். ஸ்கிப்பிங் கயிறுகளை சில பல வடிவங்களில் மாற்றி சுழற்றுவர். அதுவும் நல்லது.
இதய ஆரோக்கியம்
சில ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வில் ஸ்கிப்பிங் செய்பவர்கள் ஆரோக்கியம் மேம்பட்டதாக இருந்தது தெரிய வந்துள்ளது. ஜாகிங் செல்லும் நபர்களுக்கு இதயம் மேம்படுவது போலவே, ஸ்கிப்பிங் செய்பவர்கள் இதயமும் ஆரோக்கியமாக இருந்துள்ளது. வெறும் 10 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்தால் கூட போதுமானது. நீங்கள் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்யும் போது 300 கலோரிகள் வரை ஆற்றல் வெளியேறும் என கூறப்படுகிறது.
சுறுசுறுப்பு
ஸ்கிப்பிங் கால்களுக்கு ஒரு சிறந்த இயக்கம் அளிக்கிறது. சுறுசுறுப்பாகவும், எப்போது விழிப்புடனும் செயல்பட உதவுகிறது. கவனமாக செயல்படும் புத்திக் கூர்மையை வழங்குகிறது.
எலும்புகளை பலப்படுத்துகிறது
எலும்புகளை பலப்படுத்துவதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. 2017ஆம் ஆண்டு செய்ய்யப்பட்ட ஆய்வில், வாரம்தோறும் ஸ்கிப்பிங் செய்த 11 முதல் 14 வயதுடைய சிறுமிகள், ஸ்கிப்பிங் செய்யாத ஆட்களை விடவும் எலும்பு அடர்த்தி அதிகம் கொண்டிருந்தனர்.
உடல் எடையை குறைக்க ஸ்கிப்பிங் மட்டுமல்ல, உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். துரித உணவுகளை குறைத்து கொள்ளுங்கள். பிராணயாமா, யோகா, சுவாச பயிற்சி மேற்கொள்ளுங்கள். சமதளமான தரையில் ஸ்கிப்பிங் செய்யுங்கள். மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் குதியுங்கள். தினமும் ஸ்கிப்பிங் செய்த பிறகு முழங்கால்கள், கணுக்கால்களை மசாஜ் செய்ய வேண்டும்.
கணுக்கால் மூட்டுகளில் இருக்கும் அழுத்தத்தை போக்க குளிர்ந்த நீரில் வைக்கலாம். இசை கேட்டபடியே ஸ்கிப்பிங் செய்தால் மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளியாகும். இதயம், நுரையீரல் பாதிப்பு ஏற்படாத படி ஸ்கிப்பிங் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.