Kadal Viral : CWC-ல் சுந்தரி அக்கா பரிந்துரைத்த கடல் விரால் மீன்கள்.. எவ்வளவு சத்துக்கள் இருக்கு தெரியுமா?

Published : Jul 13, 2025, 01:22 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெடுத்துள்ள சுந்தரி அக்கா கடல் விரால் மீன்கள் குறித்து பேசி இருந்தார். தற்போது பலரும் கடல் விரால் மீன்கள் குறித்து இணையத்தில் தேடத் துவங்கியுள்ளனர்.

PREV
15
Health Benefits of Kadal Viraal Fishes

மீன் வகை உணவுகள் பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடுகின்ற ஒரு இறைச்சி வகையாக உள்ளது. மீன்களில் குறைந்த கொழுப்புடன், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் சிறியவர்கள் தொடங்கி பலருக்கும் ஏதுவான இறைச்சி வகையாக உள்ளது. கடல் மீன், ஆற்று மீன், வளர்ப்பு மீன்கள் என பல வகையான மீன்கள் சந்தைகளில் விற்பனையாகின்றன. இதில் கடல் மீன்கள் சற்று விலை உயர்ந்தவை. குறிப்பாக கடலில் பிடிக்கப்படும் வஞ்சரம் மீனின் விலை மிக அதிகம். ஆனால் வஞ்சரம் மீனை விட கடல் விரால் மீன்கள் மிக சுவையாக இருக்கும் என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெடுத்திருக்கும் சுந்தரி அக்கா கூறியிருந்தார். அந்த எபிசோடு ஒளிபரப்பான பிறகு பலரும் கடல் விரால் மீன்கள் குறித்து இணையத்தில் தேடத் துவங்கியுள்ளனர்.

25
திடீரென பிரபலமான கடல் விரால் மீன்கள்

மெரினா கடற்கரையில் மீன் உணவுகள் வியாபாரம் செய்து பிரபலமானவர் சுந்தரி அக்கா. அவர் தற்போதைய விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். கடந்த வாரம் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கெடுத்திருந்தார். அவர் சுந்தரி அக்காவிடம் சென்று மீன்களில் எது சுவையான மீன்? என கேட்டார். அதற்கு சுந்தரி அக்கா கடல் விரால்கள் மிக சுவையாக இருக்கும் என பதிலளித்தார். ஆனால் பலரும் வஞ்சரம் மீன் தானே சுவையாக இருப்பதாக கூறுகின்றனர் என விஜய் ஆண்டனி கேட்க, அது மக்களிடையே அப்படி பதிவாகிவிட்டது. அனைவரும் மீன் கிடைக்கச் சென்றாலே வஞ்சிரம் மீன்களையே வாங்குகின்றனர். ஆனால் வஞ்சரம் மீன்களை விட கடல் விரல்கள் அதிக சுவையுடன் இருக்கும் என சுந்தரி அக்கா விளக்கம் அளித்திருந்தார்.

35
கடல் விரால் மீன்களில் நிறைந்துள்ள சத்துக்கள்

அந்த எபிசோடுக்குப் பின்னர் பலரும் கடல் விரால்கள் குறித்து இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். கடல் விரால்கள் மீனவர்களிடையே பிரபலமான ஒரு மீன் வகையாகும். இது ஆசியன் சீபாஸ் அல்லது பாராமுண்டி என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான சதைப் பகுதியுடன் குறைந்த முட்களுடன் காணப்படுகிறது. இந்த மீன்கள் நீண்ட உடல் வடிவத்தை கொண்டிருக்கும். பெரிய வாய், உயர்ந்த முதுகுத்துடிப்பு ஆகியவை இருக்கும். இவை வாழ்விடத்திற்கு ஏற்ப சற்று இருண்ட அல்லது பிரகாசமான நிறத்தில் காணப்படும். 60 கிலோ எடை வரையிலும் இந்த மீன்கள் வளரக்கூடியவை. குறைந்த முட்களுடன் அதிக சதை பகுதி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக உண்ணலாம். ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், புரதம், வைட்டமின்கள், மக்னீசியம், ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

45
இதய ஆரோக்கியத்திற்கு உதவும் கடல் விரால்கள்

இந்த கடல் விரால் மீன்கள் கொடுவா என்றும் கெட்டு விரால் என்றும் தமிழகத்தில் விற்பனையாகிறது. விவசாயிகள் இதன் மீன் குஞ்சுகளை வாங்கி வந்து குளங்களிலும் வளர்க்கின்றனர். இந்த மீன்களில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி ஆகிய பண்புகள் உள்ளது. இதைத்தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உள் உறுப்புகளில் ஏற்படும் இன்ஃப்ளமேஷன்கள் குறைக்கப்படுகிறது. இதில் இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் மூளை மற்றும் நரம்பு ஆகியவற்றின் செயல்பாடுகளையும் அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கடல் விரால் மீன்கள் சிறந்த தேர்வாகும். இதில் புரதச்சத்து நிறைந்திருப்பதால் ஜிம்முக்கு செல்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாக இருக்கிறது. நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.

55
கடல் விரால்களை எப்படி சமைப்பது?

கடல் விரால் மீன்களில் சிறிய செதில்கள் அதிகம் இருக்கும். எனவே இதை கடைகளில் சுத்தம் செய்து வாங்கி வந்தாலும் வீட்டில் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பிட்ட சீசனில் மட்டும் இது அதிகமாக கிடைக்கும் என்பதால் அந்த சீசன்களில் வாங்கி சாப்பிடலாம். இந்த மீன்களை மசாலா தடவி மொறுமொறுவென வறுவலாக செய்து சாப்பிடலாம் அல்லது காரசாரமான மீன் குழம்பாகவும் செய்யலாம். ஆரோக்கியமான முறையில் சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் குறைந்த எண்ணையில் கிரில் செய்து அல்லது ஆவியில் வேக வைத்து மசாலா சேழ்த்துற பரிமாறலாம். கடல் விரால் மீன்கள் சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்தவை. கிடைக்கும் சமயத்தில் இந்த மீன்களை வாங்கி சாப்பிட மறவாதீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories