ஓடி ஓடி உழைத்து பொருள் சேர்த்தும் உடல் கெட்டுப்போனால், என்ன பயன் ? உலகம் நவீனமயமாகி வருகிறதுதான். அன்றாட வேலைகள் எளிமையாகி வருகிறதுதான். உணவு பொருள்களை பாதுகாத்து வைக்க எப்படி குளிர்சாதன பெட்டி உதவுகிறோ, அதே போல, பாதுகாப்பாக குளிர்காற்று வாங்கி கொண்டிருக்கும் உணவுகளை பத்திரமாக மீட்டு மீண்டும் அவற்றை சூடு செய்யும் பெரும்வேலையை மைக்ரோவேவ் ஓவன் செய்து முடிக்கிறது. அப்படி வாரத்தின் முதல் நாள் அடுப்பில் தயாரான உணவு, வாரத்தின் கடைசி நாள் வரை பத்திரமாக பரிமாறப்படும்.
நவீனம் கொண்டுவரும் ஆபத்து!
தோசைக்காக அரைத்து வைக்கும் மாவுத் தொடங்கி, பண்டிகையின் போது சமைத்து வைக்கும் சிக்கன் பிரியாணி வரைக்கும் வாரம் முழுக்க கெட்டு போகாமல் பாதுகாத்து தருகிறது நவீனம். அவற்றை குளிர்சாதன பெட்டியிலிருந்து தேவைக்கேற்ப ஓவனில் சூடுசெய்து பயன்படுத்தும் வசதியும் இருக்கின்றது. ஆனால் இந்த நவீனம் உடலுக்கு கொண்டு வரும் ஆபத்து பற்றி போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.
சொல்லப்போனால், ஒரு சில உணவுகளை மீண்டும் சூடுசெய்து சாப்பிடுவதே உடலுக்குள் நஞ்சை விளைவிக்கிறது. அப்படி மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்து சாப்பிடவே கூடாத உணவுகளை பற்றி பார்க்கலாம்.