
காய்ச்சல், அதிகப்படியான அல்லது இடைவிடாமல் வேலை செய்தல் போன்ற பல காரணங்களால் உடல் சோர்வு ஏற்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் உடல் சோர்வாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் அது கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம்.
ஆமாங்க, காலையில் ஏற்படும் சோர்வு நாளடைவில் நாள் முழுவதும் சோர்வை உண்டாக்கி விடும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே இந்த சோர்வை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆழ்ந்த தூக்கம் நம் அனைவருக்கும் மிகவும் அவசியமானது. குறட்டை விட்டு தூங்குவதே நல்ல தூக்கம் என்று பலர் நினைப்பர். ஆனால் அது உண்மையல்ல. எப்படியெனில், நீங்கள் தூங்கும் அருகில் போதுமான அளவு காற்று இல்லை என்றாலோ, சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றாலோ அல்லது போதுமான நேரம் தூங்க முடியவில்லை என்றாலோ நாள் முழுவதுமே உடல் சோர்வாகவே இருப்பீர்கள். எனவே, நீங்கள் தூங்கி எழுந்த பிறகு காலையில் உங்களது உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், இரவு தூக்கம் சரியாக இருக்கிறதா என்பதை யோசியுங்கள்.
உடலின் பல்வேறு செயல்களுக்கு மிக முக்கிய காரணம் சீரான தைராய்டு சுரப்பாகும். இதன் ஆரம்ப அறிகுறியை சரியாக உணரவில்லை என்றால், அது தீவிரமாகும் போது உடலில் சோர்வு ஏற்படும். ஆனால், இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டால் உடல் சோர்வாக இருக்காது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் உடல் சோர்வு ஏற்படும். எனவே, நீங்கள் தினமும் காலையில் உடல் சோர்வாக உணர்கிறீர்கள் என்றால், உங்களது இரத்த சர்க்கரை அளவு சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.
இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கும் உடல் சோர்வு மற்றும் அதிக களைப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் காலையில் எழும்போது சோர்வுடன் தலைவலியும் இருந்தால் இந்த பிரச்சினையின் அறிகுறியாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் தலை பாரமாக இருக்கும். அத்தகையவர்களுக்கும் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கக்கூடும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது.
உடல் சோர்வுக்கு மேலே குறிப்பிட்ட விஷயங்களும் காரணமாக இருந்தால் அதற்குரிய சிகிச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். கூடவே உங்களது வாழ்க்கை முறையில் நீங்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் இங்கே :
- தினமும் காலை எழுந்ததும் 30 முதல் 45 நிமிடங்கள் கண்டிப்பாக வாக்கிங் செல்லுங்கள். அதிலும் மிதமாக அல்லாமல் வேகமாக நடக்கவும்.
- நீங்கள் எப்போதெல்லாம் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் சுமார் 10 நிமிடங்கள் கண்களை மூடி சுவாசப்பயிற்சி செய்யுங்கள். புத்துணர்ச்சியாக உணருவீர்கள்.
- புரதம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடுங்கள். குறிப்பாக காலை உணவில் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடல் சோர்வை நீக்கலாம்.