
ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்பினால் வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். உடலில் ஏற்படும் மாற்றங்களையும், நோய்களையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற மருத்துவப் பரிசோதனைகள் உதவுகிறது. வருடத்திற்கு ஒரு முறையாவது செய்து கொள்ள வேண்டிய இரத்தப் பரிசோதனைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த பரிசோதனையில் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், இரத்த தட்டணுக்கள், ஹீமோகுளோபின் அளவு போன்ற அனைத்து கூறுகளும் பரிசோதிக்கப்படுகிறது. இந்த பரிசோதனைகள் மூலம் இரத்த சோகை, தொற்று நோய்கள், அலர்ஜி, இரத்தம் உறைதல் கோளாறுகள், லூகேமியா மற்றும் இரத்தப் புற்று நோய்கள் போன்ற சில நோய்களை கண்டறிய முடியும். இரத்த சிவப்பணுக்களை கணக்கிடுவதன் மூலம் சோர்வு, பலவீனம், இரத்தசோகை போன்ற பிரச்சனைகளையும், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் தொற்றுக்களையும், தட்டணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதன் மூலம் இரத்தம் உறைதல் பிரச்சனைகளையும் நம்மால் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை அளிக்க முடியும்.
தற்போது வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் தாக்கும் ஒரு நோய்தான் நீரிழிவு. நீரிழிவு இரத்தப் பரிசோதனை பொதுவாக இரவு உணவுக்குப் பின்னர் 8 முதல் 12 நேரம் கழித்து செய்யப்படுகிறது. HbA1C என்கிற பரிசோதனை மூன்று மாதங்களில் இரத்த சராசரி சர்க்கரை அளவை மதிப்பிடுகிறது. நீரழிவு பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் அதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். உயர் இரத்த சர்க்கரை அளவு அல்லது ப்ரீ டயாபடீஸ் இருப்பவர்கள் இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் நீரழிவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவால் சிறுநீரக செயலிழப்பு, கால் நரம்புகள் பாதிப்பு, கண் பார்வை இழப்பு உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே நீரழிவு குடும்ப வரலாறு உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
உடலில் இருக்கும் கொழுப்புகளின் அளவை மதிப்பிடுவது மிகவும் அவசியம். இந்த பரிசோதனையில் மொத்த கொழுப்பு, உயர் அடர்த்தி கொழுப்பு புரதம் (HDL - நல்ல கொழுப்பு) குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் (LDL - கெட்ட கொழுப்பு) மற்றும் டிரைகிளிசரைடுகள் ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. அதிக LDL மற்றும் டிரைகிளிசரைடுகள் மற்றும் குறைந்த HDL ஆகியவை இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை அதிகரிக்கும். மேலும் இந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம் தமனிகளில் கொழுப்பு படிவதை கண்டறிய முடியும். 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒருமுறை இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இதய நோய் இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குடும்பத்தில் ஏற்கனவே இதய பிரச்சனை உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த பரிசோதனையை செய்து கொள்வது அவசியம்.
இரத்தத்தில் உள்ள கிரியேட்டின் மற்றும் ரத்த யூரியா நைட்ரஜன், எலக்ட்ரோலைட்டுகள் (சோடியம், பொட்டாசியம், குளோரைடுகள்) போன்ற அளவுகள் இந்த பரிசோதனையில் கணக்கிடப்படும். சிறுநீரகம் சரியாக செயல்படுகின்றதா என்பதை கண்டறிய இந்த பரிசோதனை மிகவும் முக்கியம். நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். நாள்பட்ட நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரகங்களில் சேதங்களை ஏற்படுத்தலாம். எனவே இந்த நோய்கள் இருப்பவர்கள் அடிக்கடி சிறுநீரகங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும் குடும்ப வரலாறு உள்ளவர்களுக்கும் சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்தான். எனவே இவர்கள் வருடம் ஒருமுறையாவது சிறுநீரகங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்.
உடலின் ராஜ உறுப்பு என்று கல்லீரல் அழைக்கப்படுகிறது. உடலுக்கு தேவையான 50-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை கல்லீரல் மேற்கொள்கிறது. LFT பரிசோதனைகள் செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள என்சைம்களான ALT, AST, பிலுருபின், அல்புமின் போன்ற அளவுகளை கணக்கிட முடியும். கல்லீரல் அலர்ஜி, கொழுப்பு கல்லீரல், சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிய இந்த பரிசோதனை உதவுகிறது. சில மருந்துகளும் கல்லீரலை பாதிக்கும். எனவே கல்லீரல் பரிசோதனையை ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும். மது அருந்துபவர்கள், குறிப்பிட்ட சில மருந்துகளை உட்கொள்பவர்கள், கல்லீரல் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டுதோறும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தற்போது பலருக்கும் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி குறைவாக செயல்படுதல் அல்லது அதிகமாக செயல்படுதல் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படலாம். ஹைப்போதைராடிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் ஆகியவற்றை கண்டறிய இந்த பரிசோதனை உதவுகிறது. இந்த ரத்த பரிசோதனையில் தைராய்டு தூண்டுதல் ஹார்மோன், டி3 மற்றும் டி4 ஹார்மோன்களின் அளவுகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள், சோர்வு, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை கண்டறியவும், சிகிச்சை பெறவும் இந்த பரிசோதனை உதவுகிறது. 35 வயதிற்கும் மேற்பட்டவர்கள், உடல் பருமனில் மாற்றம் ஏற்படுபவர்கள், ஏற்கனவே குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் இந்த பரிசோதனையை ஆண்டுதோறும் செய்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். வைட்டமின் டி குறைபாடு இருந்தால் ஆஸ்டியோபோராசிஸ் மற்றும் எலும்பு பலவீனம் ஏற்படும். எனவே இதை கண்காணிப்பதற்கு இரத்தத்தில் உள்ள வைட்டமின் டி அளவை பரிசோதிக்க வேண்டியது அவசியம். நோய் எதிர்ப்பிலும் வைட்டமின் டி முக்கிய பங்காற்றுகிறது. சூரிய ஒளியில் அதிகம் இல்லாதவர்கள், எலும்பு பலவீனமாக உணர்ந்தவர்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தவர்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
ஆண்கள் பொதுவாக புரோஸ்டேட் ஆண்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ளலாம். இது 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. புரோஸ்டேட் புற்றுநோயை கண்டறிய இந்த பரிசோதனை உதவுகிறது. பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்று நோய் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது மட்டுமில்லாமல் வைட்டமின் பி12, யூரிக் அமிலம், சி-ரியாக்டிவ் புரோட்டின் போன்ற பரிசோதனைகளையும் மேற்கொள்வது அவசியம். உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பது தெரிந்தால் மருத்துவரை அணுகி குறிப்பிட்ட பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனைகள் ஆரம்ப நிலையிலேயே நோய்களை கண்டறிந்து அதற்கான சரியான சிகிச்சை முறைகளை பெற உதவுகின்றன.
பல நோய்கள் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. இரத்தப் பரிசோதனைகள் மூலம் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே நாம் நோயை கண்டறிந்து விட முடியும். இது சிகிச்சையை எளிதாக்குவதோடு நோயின் தீவிரத்தையும் குறைக்கிறது. ஏற்கனவே நோய் இருப்பவர்களுக்கு பரிசோதனைகள் மூலம் சிகிச்சையில் முன்னேற்றத்தையும், மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் கண்காணிக்க உதவுகிறது. மேலும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நமது உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, வாழ்க்கை முறையில் மாற்றங்களையும் செய்ய உதவுகின்றன. உயர் கொழுப்பு, உயர் சர்க்கரை கண்டறியப்படும் பொழுது அவை தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். மேலும் ஒருவர் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொள்ளும் பொழுது அவரின் எதிர்கால மருத்துவ தீர்மானங்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
நம் குடும்பத்தில் இருக்கும் பலர் செலவை மனதில் கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதை விரும்புவதில்லை. ஆனால் இது தவறான முறையாகும். வருடத்திற்கு ஒருமுறை இரத்தப பரிசோதனை மேற்கொள்வது நம் உடல் நலத்தின் மீதான ஒரு முதலீடாகும். இரத்தப் பரிசோதனைகளின் முடிவுகளை தகுதி வாய்ந்த மருத்துவரிடம் ஆலோசித்து அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுய பரிசோதனை சுயமருத்துவம் ஆபத்தை விளைவிக்கும். எனவே வருடம் ஒரு முறையாவது இந்த பரிசோதனைகளையும், அதன் அவசியத்தையும் தெரிந்து கொண்டு பரிசோதனையை மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.