
நடிகர் ஸ்ரீகாந்த் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொக்கைன் என்கிற ஒருவகை போதைப்பொருளை பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். கொக்கைன் என்பது அதிக போதையைத் தரும் ஒரு போதைப் பொருளாகும். இது கோகோ தாவர இலைகளிலிருந்து பெறப்படும் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் சட்டவிரோதமான போதை தரக்கூடிய பொருளாகும். இது டிரோபேன் அல்கலாய்டு வகையைச் சேர்ந்தது. கோகோ என்ற பெயருடன் அல்ட்லாய்டு துணைப் பெயரான ‘ine’ சேர்ந்து கொக்கைன் என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. இது மனிதனின் உடலுக்குள் சென்று மத்திய நரம்பு மண்டலத்தை கிளர்ச்சியூட்டி போதை தருகிறது. மேலும் பசியை அடக்கும் தன்மையையும் கொண்டது. கொக்கைன் ஹைட்ரோகுளோரைடு வெள்ளைத் துகள்கள் வடிவில் காணப்படுகிறது.
ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பழங்குடி மக்கள் இந்த பொருளை மயக்க மருந்துக்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாளடைவில் இது போதைப் பொருளாக மாறியது. பெரும்பாலான நாடுகள் இதை தடை செய்யத் தொடங்கின. இருப்பினும் இந்த தடையை மீறி கொக்கைன் உலக அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் சந்தையாகவும் இது வளர்ந்துள்ளது. கொக்கைன் பயன்படுத்துவது உடல் நலனை கடுமையாக பாதிப்பதோடு, மன நலன் சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் விரைவாகத் தொடங்கி சிறிது நேரத்திற்கெல்லாம் மறைந்து விடும் என்பதால் இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டப்படுகின்றனர். இது அடிமையாதலுக்கும் வழிவகுக்கிறது.
கொக்கைனை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு பல உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. வெகுவாக இதயத்துடிப்பை அதிகரித்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை உயர்த்தி இதய நாளங்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்தத்தில் அழுத்தம் ஏற்பட்டு இதய செயலிழப்பு ஏற்படுகிறது. உடல் வெப்பநிலை அபாயகரமான அளவிற்கு உயர்ந்து, உடலில் அதிக அளவு நீரிழப்பு ஏற்படுதல், உடல் உறுப்புகள் செயலிழத்தல், அதீத காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது. கொக்கைனை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு பசி ஏற்படுவதில்லை. பசியை அடக்குவதால் சரியான உணவை உட்கொள்ளாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. கொக்கைன் பயன்படுத்திய உடனேயே அதிக உற்சாகமும், ஆற்றலும் ஏற்படும். இது தற்காலிகமானது என்பதால் அதன் பின்னர் அதீத சோர்வாக உணர்வர்.
மூளையை தூண்டுவதால் தூக்கமின்மை ஏற்படலாம். தூக்கமின்மையால் உடலில் பல அபாயகரமான பின் விளைவுகள் ஏற்படலாம். கொக்கைன் மூளையின் செயல்பாட்டை பாதிப்பதால் சில சமயங்களில் வலிப்பு பிரச்சினைகளும் உண்டாகலாம். மூளையின் ரத்த நாளங்களை சுருக்குவதால், மூளையில் ரத்த உறைவு, மூளை செல்கள் சேதமடைதல், அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றல் இழப்பு, செறிவு குறைபாடு, பக்கவாத பிரச்சனைகள் ஏற்படலாம். சுவாச மண்டலத்தையும் பாதித்து சுவாச பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். மேலும் குமட்டல், வாந்தி, தலைவலி ஆகியவையும் ஏற்படும். உடலின் ராஜ உறுப்பு என அழைக்கப்படும் கல்லீரல் கடுமையாக சேதமடையும். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழப்பு பிரச்சனைகளும் ஏற்படும்.
உடல்நலம் பிரச்சனைகள் மட்டுமல்லாமல் மனநலம் சார்ந்த பிரச்சனைகளையும் இது ஏற்படுத்துகிறது. கொக்கையின் பயன்படுத்திய சில நேரங்களுக்கு ஏற்படும் அதிக உற்சாகம் பின்னர் தீவிர மனச்சோர்வை உண்டாக்கும். பொதுவாக பதட்டமாகவும் எளிதில் எரிச்சல் அடையக் கூடியவர்களாகவும் இருப்பர். பிரமைகள், மாயத் தோற்றங்கள், சித்த பிரம்மைகள் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்த நிலை முற்றும் பொழுது மன நோயாகவும் அது மாறலாம். தீவிர மனச்சோர்வு காரணமாக சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் ஏற்படலாம். நினைவு குறைதல், செவித்திறன் குறைதல், கண் பார்வை குறைதல் போன்றவையும் ஏற்படும். போதைப் பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டுப்படுத்த முடியாத ஆசை காரணமாக சமூக குற்றங்களும் நிகழலாம். சிலருக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுவதால் தனிப்பட்ட மற்றும் சமூக உறவுகள் பாதிக்கப்படும். சமூகத்தில் இருந்து விலகி தனிமையை நாடும் சூழல் ஏற்படும்.
கொக்கைன் பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்பதால் சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் சிறை தண்டனைக்கு வழி வகுக்கலாம். போதைப் பொருட்களின் விலை காரணமாக பண விரயம் ஏற்பட்டு நிதி சிக்கல்கள் உண்டாகலாம். கல்வியில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். வேலையில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போவது, குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவது என பல்வேறு சமூக பிரச்சனைகளையும் சந்திக்கக் கூடும். கொக்கைனை பயன்படுத்த வேண்டும் என்கிற தீவிர ஆசை, போதைப்பொருளை பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செய்ய தயாராக இருத்தல், பயன்பாட்டின் அளவை கட்டுப்படுத்த முடியாமல் இருத்தல், தவிப்பு, மனச்சோர்வு, குழப்பம், சிதைந்த சிந்தனை, தூங்குவதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை போதைப் பொருளுக்கு அடிமையாவதற்கான அறிகுறிகள்.
கொக்கைன் அடிமைகளில் இருந்து மீள்வது என்பது மிக சவாலான காரியம். ஆனால் இது சாத்தியமற்றது அல்ல. முறையான சிகிச்சை, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை ஆகியவற்றின் மூலம் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டுக் கொண்டு வர முடியும். கொக்கைன் ஒரு ஆபத்தான, உடலுக்கு சீர்கேட்டைத் தரும் ஒரு போதைப் பொருளாகும். இது தனிநபரின் உடல்நலன், மனநலனை பாதிப்பதோடு சமூகத்தையும் முற்றிலும் சீரழிக்கும் ஆற்றல் கொண்டது. கொக்கைன் தனி மனிதனுக்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும். போதைப் பொருளுக்கு யாரேனும் அடிமையாவது தெரிந்தால் அவர்களை மீட்டுக் கொண்டு வருவது என்பது நீங்கள் இந்த நாட்டிற்கு நீங்கள் செய்யும் பேருதவியாகும்.